வடலூர் டிரஸ்டிகள் மறுப்பு - 1896


வடலூர் - பார்வதிபுரம் சத்திய தருமச்சாலை
மன்மத ௵ தை ௴ கஎ உ
17.01.1896

தென்னார்க்காடு டிஸ்டிரிக்ட் கூடலூர் தாலுக்கா பார்வதிபுரம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானக் கோயில் தேவஸ்தான தருமஸ்தானங்களின் டிரஸ்டி சிவாசாரியார் என்னும் போலிப்பெயர் புனைந்து தான்தோன்றித் தம்பியராய்த் திரிந்துவரும் குருக்கள் என்பவரால், விஜய ௵ ஆனி ௴ 22 உ ஓர் விளம்பரத்தை இப்போது பார்வையிட்டதில், அதிற்கண்ட சங்கதிகள் விநோதங்களாகவும் பொய்யினாற் புனையப்பட்டதாயு மிருப்பதால் அவ் விளம்பரத்தை வாசித்துப்பார்க்கப் பட்டவர்கள் இவருடைய கள்ளக் கட்டுக்கதைகளை நம்பி மோசம்போகாம லிருக்கும்பொருட்டும், மேற்படி பார்வதிபுரத்தில் யாரால் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையும் தருமச்சாலையும் நிர்ணயிக்கப்பட்டதோ அந்த அருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்க சுவாமிகளுடைய திருவுளக் கருத்துக்கும் கட்டளைக்கும் நேர்விரோதமாய் தன் குடும்ப ஜீவனார்த்த நிமித்தம், பலபல நவீன ஏற்பாடுகளைச் செய்துவருவதினால் உண்டாகுங் கெடுதியைத் தவிர்க்கும்பொருட்டு, நடத்தவண்ணம் சகலருக்குந் தெரிவிக்க வேண்டியது மேற்படி சபையைச் சேர்ந்த அபிமானிகளுக்கு உரியதாதலின் மேற்படி விளம்பரத்தில் பொய்யினாற் புனைந்திருக்கும் ஆபாசங்களைச் சுருக்கமாய் இதனடியில் தெரிவிக்கப் புகுந்தனம்.

மேற்படி விளம்பரத்தில் அடங்கிய சங்கதிகள் ஒவ்வொன்றும் பொய்யினாற் புனைந்ததென்று தெரிந்துகொள்ளு முன்னரே, இவ் விளம்பரத்தை யெழுதிய குருக்கள் ஆதியில் இன்னவரென்றும், அவருக்குந் தருமச்சாலைக்கும் உண்டான சம்மந்தம் இத்தன்மைய தென்றும், மேற்படி பார்வதிபுரத்தில் வள்ளலாரால் நிர்ணயிக்கப்பட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையிலும் சத்திய ஞானசபையிலும் நடத்தவேண்டிய விதிகள் வள்ளலாரால் உண்டான கட்டளைகள் இன்னதென்றும், சமரச சுத்த சன்மார்க்க மரபு இன்னதென்றும் தெரிந்து கொண்டாலல்லது பொய்யினாற் புனைந்திருக்கும் கதைகள் மேற்படி விளம்பரத்தில் இன்னவையென்று புலப்படுவது அரிதாகையால், டிரஸ்டி சிவாசாரியாரென்று போலிப்பெயர் புனைந்தவருடைய வரலாற்றை, முதல் ஒருவாறு சுருக்கிச் சொல்வதை நேயர்களே ஒவ்வொருவரும் உற்றுக் கவனியுங்கள்.

இவர் ஆதியில் சிதம்பரத்துக்கடுத்த ஓர் குக்கிராமத்தில் ஐயனார் கோயிலில் பூசைசெய்து கொண்டிருந்தவர். இவருக்கு அத்தொழிலில் தக்க வரும்படி யில்லாமை தரித்திராம்சத்தி லிருந்தபடியால் மழைச்சாமி யென்பவர் ஒருவரை அடுத்து, வைத்தியங் கற்றுக்கொள்வதாய் அபிநயங்காட்டி, அவருடன் கடந்த சுக்கில வருடம் வைகாசி மாதத்தில் மேற்படி தருமச்சாலைக்குவந்து நாலு ஐந்து தினமிருந்து போய்விட்டனர். மேற்படி வள்ளலார் மேட்டுக்குப்பம் என்னும் சித்தி வளாகத்தில் எல்லாம் சித்தத்திருக்கோலத்துடன் வெளிப்பட்டு இறந்தவர்களை யெல்லாம் எழுப்பப்போகிறதாக வெளிப்படுத்திய பத்திரிகைக்குப் பின், தன் தந்தையை சமாதிசெய்துவிட்டுக் குடும்ப சமேதராய் மேற்படி தருமச்சாலைக்கு வந்தனர். அக்காலத்தில் இவருடைய நிலைமையோ நெடுங் காலமாக வள்ளலாரைச் சூழ்ந்திருந்த அநேக செல்வந்தர்கள் அக்காலத்தில் நடந்தேறி வந்த கட்டடங்களுக்கு வேண்டிய பொருளுதவி செய்யவும் ஏழைகளுக்கு அன்னவிரயஞ் செய்யவு மிருந்த செல்வந்தர்களில் இவரும் ஒருவராகவிருப்பாரா, இல்லை - அல்லது அநேக அபிமானிகள் அக்காலத்தில் நடந்தேறிவந்த காரியங்களுக்குக் காரியஸ்தர் களாக ஏர்ப்பட்டு காரியங்களை நடத்திக்கொண்டு வந்தார்கள். அப்படிப்பட்ட காரியஸ்தர்களில் இவர் ஒருவராக இருப்பாரா, இல்லை - அல்லது சுவாமிகளுடைய விவகார காலத்தில் கல்வித்திறமுடைய அறிவுடையோர்கள் அனேகர் சூழ்ந்து கொண்டு அற்புதமான விவகாரங்களைக் கேழ்க்கவும் சந்தேக விபரீதங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவும் சக்தியுடையவர்களாக இருந்தார்கள் அப்படிப் பட்டவர்களில் இவர் ஒருவராக இருப்பாரா, இல்லை. - அல்லது அனேக குடும்பங்கள் ஏழைகளுக்குப் போடும்போது சாப்பாட்டை யெதிர்பாராமல் தங்கள் சொந்தப் பொருளைக்கொண்டு ஜீவித்திருந்தார்கள் அப்படிப்பட்டவர் களில் இவர் ஒருவராக இருப்பாரா, இல்லை. ஆனால் இவர் சரித்திரந்தான் எப்படிப்பட்டது. "உடுக்கவோ ஒரு கந்தைக்கு மேலில்லை, உண்ணவோ வுணவுக்கும் வழியில்லை" என்னும் வாக்கியப் பொருளாகவிருந்து ஏழைகளைப் போல் இவரும் பொதுவிடத்தில் படிவாங்கிக் காலக்ஷேபஞ் செய்துகொண்டு வந்தார். சில தினத்திற்குப் பின் தானும் வள்ளலார் சமூகத்தில் ஒரு தொழிலாளியாகவிருக்க வெண்ணங்கொண்டு, வள்ளலார் இருந்த அறையில் ஒரு இரும்புபெட்டியிருந்தது. அதற்குப் பிரதிதினமும் தோத்திரங்களோடு வலம் வந்து தீவார்த்தனை செய்ததுண்டு. ஒருநாள் இவர் தனக்கு ஜாதிசமய முதலான பேதங்கள் இல்லையென்றும் தான் பிரதிதினமும் மேற்படி பெட்டிக்கு தீவார்த்தனை செய்வதாய் விண்ணப்பித்துக் கொண்டார். அப்படியிருந்தால் செய்யலாமென்றார்கள். அத்தருணம் இவர் தன் ஆசாரங்களைவிட்டு பூணூல் முதலியதை நிவர்த்திசெய்து, பிரதிதினம் சாயந்திரம் பார்வதிபுரத்திலிருந்து வள்ளலார் இருப்பிடமாகிய மேட்டு குப்பத்திற்குப் போய், தீபாராதனை செய்துவிட்டு உடனே தன் இருப்பிடத்திற்குப் போய்விடுவார். இவர் போகாத காலத்தில் நேர்ந்தவர்களும் தீபாராதனை செய்வதுண்டு. வள்ளலார் இரண்டரை வருட காலமாக அல்லும் பகலும் செய்துகொண்டு வந்த அற்புதமான விவகாரங்களை இவர் நேரில் கேட்டறிந்தது கொஞ்சந்தான். ஆனால் கேட்டவர்களிடத்திற் கேட்டுக் கிஞ்சித்துத் தெளிந்தார். வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் கொஞ்ச தினத்திற்கு முந்தியே இவருடைய தீபாராதனைத் தொழிலும் நின்றது. வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளுந் தருணத்தில் வேட்டவலம் ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியார் தன் ஜமீனுக்குப் போயிருந்தபடியால், ஜமீன்தார் இன்னும் வரவில்லையா? என்றார்கள். அதைக் கேட்டிருந்த இவர் உடனே ஜமீனுக்குப் போய் வள்ளலார் சொல்லாத சில கற்பனையான வார்த்தைகளை அவருக்குச் சொல்லி வீண் தொந்தரவைக் கொடுத்து அழைத்துக்கொண்டு வந்தார் அதை வள்ளலார்அறிந்து இவரை நோக்கி "நூலெனிலோ கோல் சாயும்" என்ற வாக்கியத்தைச் சொல்லி பிராமணர்கள் தவிர மற்ற இதர ஜாதியாருக்கு இந்தத் துணிவு வாராதென்றார்கள். இவருடைய சசுவாசத்தினால் மேற்படி ஜமீன்தாரருக்கு கெடுதல் நேரிடுமென்பதாக எண்ணி, இவரை உடனே ஊருக்குப் போய்விடும்படி கட்டளையிட்டார்கள். இச்சொல்லைக் கேட்ட இவர் நாணமுற்று வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் வரையில் வெளி ஊர்களில் போய் சஞ்சாரம் செய்துகொண்டிருந்து திருக்காப்பிட்டுக் கொண்ட மூன்றாம்நாள் சாலைக்கு வந்து சேர்ந்தார். வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளுங் காலத்தில் அருகாமையிலிருந்ததாகப் பெருமையாகப் புளுகுவார். அது பெரும் புளுகே.

இந்தப் புண்ணிய புருஷர் சாலைக்கு வந்து சேர்ந்த 15 தினத்திற்குள் "தூலெனிலோ கோல் சாயும்" என்று சொன்ன வாக்கியத்தின்படி வள்ளலாருடைய உத்தரவின்படி சில ஏழைகளைக் கைவிடாமல் காப்பாற்றிக் கொண்டிருந்த காரியஸ்தருடைய மனத்தையும் கெடுத்து, பாதுகாத்துக் கொண்டிருந்த ஏழைகளை முற்றுங் கைவிடச்செய்து, ஜமீன்தாரருக்கு காரியஸ்தராகயிருந்த கனகசபை பிள்ளை யென்பவர் மூலமாக ஜமீன்தாரரைத் தன் வசப்படுத்திக்கொண்டு இவர் சமரச சன்மார்க்க மரபில் விழுந்து பாபியாய் விட்டாரென்று இவருடைய இனத்தார் நீக்கி வைத்திருந்தார்கள்; அப்படிப்பட்டவர்களை யெல்லாம் தன் வசப்படுத்தி, தான் பின்செய்யப் போகிற தன் சொந்த கிரக கிர்த்தியங்களில் அவர்கள் விரோதஞ் செய்யாமல் உடன்பட்டு நடத்த, அவர்களுக்குப் பொருளாசை காட்டி வசப்படுத்த, மேற்படி ஜமீனில் ஒரு ஆலயத்திற்குக் கும்பாபிஷேகஞ் செய்யத் தந்திரமாக உடையவர்களைத் தூண்டி, விரோதப் பட்டிருந்த இனத்தாராகிய குருக்கள்மார்களையெல்லாம் வரவழைத்து அந்த ஜமீனுக்கு வேண்டிய செலவு வைத்து அந்தக் குருக்கள்மார்களுக்கு வேண்டிய பொருளுதவி செய்வித்தார். மேலும் அந்த ஜமீன்தாரருக்குச் சந்ததி யில்லாதிருந்த படியால் நவக்கிரக சாந்தி செய்வித்தால் சந்ததி யுண்டாகுமென்று ஆசைகாட்டி, பணத்தாசையினால் வசப்படுத்தவேண்டி குருக்கள்மார்களை யெல்லாம் வரவழைத்து அவர்களுக்கு வேண்டிய பொருளுதவி செய்வித்தார். இப்படிப்பட்ட பல தந்திரத்தால், தன்னை நீக்கி வைத்திருந்த குருக்கள்மார்களை யெல்லாம் வசப்படுத்தி ஜமீன்தாரால் வேண்டிய பொருளுதவி பெற்று இராமேஸ்வர முதலான விடங்களுக்குப் போய் தான் சன்மார்க்கத்தில் நின்ற தோஷத்திற்காகப் பிராயசித்தஞ் செய்துகொண்டுவந்து பலவித தந்திரத்தால், பிரயோஜனஞ் செய்வித்து வசப்படுத்தி வைத்திருந்த குருக்கள்மார்களை யெல்லாம் வரவழைத்து, தான் சிவாசாரியார் பட்டம் பெற்றுக்கொள்ள, மேற்படி பார்வதிபுரத்தின் எல்லையில் பந்தல் முதலானதும் போடத்தொடங்கினார். அப்போது அங்கிருந்த சில அபிமானிகள், இவர் மார்க்கத்திற்கு விரோதமாகப் பிராயச்சித்தஞ் செய்துகொண்டபடியால் சபை முதலான விடங்களில் இவரை தீவார்த்தனைச் செய்விக்கப்படாதென்றும், மேலும் இது யாவருக்கும் பரமாசாரியார் ஸ்தானமானபடியால் இந்தவிடத்தில் இவர் போலி ஆசாரியர் அபிஷேகஞ் செய்துகொள்ளப் படாதென்றும் ஆக்ஷேபித்தார்கள். அப்போது இவர், தன் பெண்ணை விவாகஞ்செய்து கொடுக்குநிமித்தம், இப்படிப்பட்ட மாறான வேடங்களைப் பூண்டிவதாயும் பெண்ணுக்கு விவாகம் முடிந்தபின் உங்களில் நானும் ஒருவனாக இருப்பேனென்று இதமான வார்த்தைகளாலும் பேதமற்ற சமரச் செய்கைகளாலும் அவர்களை மயங்கச்செய்து, தான் செய்துகொள்ளப் போகிற போலி ஆசாரி அபிஷேகத்திற்கு, மேற்படி ஜமீன்தாரிடம் மறுபடியும் பொருளுதவிப்பெற்று, பொருளாசைக்காட்டி வைத்திருந்த தன் இனத்தாரை யெல்லாம் வரவழைத்து, போலி ஆசாரியர் பட்டம் பெற்றுக்கொண்டார். பெற்றுக்கொண்ட கொஞ்ச தினத்திற்கெல்லாம் மறுபடியும் ஜமீன்தாரிடம் பொருளுதவிபெற்று பெண்ணின் விவாகத்தையும் முடித்துக்கொண்டார். இவர் மயக்கவலையில் அகப்பட்ட அந்த ஜமீன்தார் வள்ளலார் சொன்ன புண்ணிய கயிங்கரியத்தை மறந்து, அவர் காலபரியந்தம் எல்லா வுதவியும் இவருக்கே செய்யப் புகுந்து பொருள் நஷ்டத்தைக் கண்டார்.

நேயர்களே! இந்தக் குருக்கள் அருணந்தி சிவாசாரியார் பட்டம் சிரசில் தரித்துக்கொண்ட கொஞ்ச தினத்திற்கெல்லாம் இவர்தான் முன்னின்றிருந்த நிலையிலிருந்து மாறுபட்டு, இவர் அந்த விடத்தை அபிமானித் திருந்தவர்க ளிடத்திலிருந்த சகசத்தையும் மறந்து, நெடுநாள் கட்டி மறைத்துவைத்திருந்த காசு பரிக்கும் வேடத்தைப் பூண்டு, சமரச சுத்த சன்மார்க்க மரபை விளக்கிக் காட்டவந்த ஞானசபையில் வள்ளலார் திருவாக்கிற்கு விரோதமாக "நூலெனிலோ கோல்சாயும்" என்று இவருக்குச் சொன்ன வாக்கியத்தைப் பரிபாலனஞ்செய்ய ஜாலவேடத்தைக் காட்ட ஆரம்பித்தார்.

இவர் ஜாலங்காட்டும் ஞானசபை விஷயமாக வள்ளலார் திருக்கரத்தால் எழுதிக்கொடுத்த பத்திரிகை இதனடியில் வருமாறு காண்க.

அருட்பெருஞ்சோதி

அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம். இன்று தொடங்கி சபைக்கு, சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை யென்றும், சாலைக்குச் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை யென்றும், சங்கத்திற்குச் சமரச சுத்த சன்மார்க்க சங்கமென்றும் திருப்பெயர் வழங்கல்வேண்டும். இன்று தொடங்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது அருட்பெருஞ்சித்தி வெளிப்படும் வரைக்கும் ஞானசபைக்குள்ளே தகரக்கண்ணாடி விளக்கு வைத்தல்வேண்டும், பித்தளை முதலியவற்றால் செய்த குத்துவிளக்கு வேண்டாம். மேலேற்றுகிற குளோப்பு முதலிய விளக்குகளும் வேண்டாம். தகரக்கண்ணாடி விளக்கு வைக்குங்காலத்தில் தகுதியுள்ள நம்மவர்கள் தேகசுத்தி, கரணசுத்தி யுடையவர்களாய், திருவாயிற் படிப்புறத்தி லிருந்துகொண்டு விளக்கேற்றி, பன்னிரண்டு வயதிற்குட்பட்ட சிறுவர் கையிற் கொடுத்தாவது, எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியவர் கையிற் கொடுத்தாவது உட்புறவாயல்களுக்குச் சமீபங்களில் வைத்துவரச் செய்விக்கவேண்டும். நாலு நாளைக்கு ஒரு விசை காலையில் மேற்குறித்த சிறியரைக் கொண்டாயினும் பெரியரைக் கொண்டாயினும், உள்ளே தூசு துடைப்பிக்க வேண்டும். தூசு துடைப்பிக்கப் புகும்போது நீராடிச் சுத்தத்தேகத் தோடு கால்களில் வத்திரஞ் சுற்றிக்கொண்டு புகுந்து, முட்டிக்காலிட்டுக் கொண்டு தூசு துடைக்கச் செய்விக்கவேண்டும். விளக்கு வைக்கின்றபோதும் இங்ஙனமே செய்விக்க வேண்டும். விளக்குவைத்தற்கும் தூசு துடைத்தற்கும் தொடங்குகின்ற பன்னிரண்டு வயதிற்குட்பட்ட சிறுவரும் எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியவரும் பொருளிடம்போகம் முதலியவற்றில் இச்சை சிறிதும் இல்லாதவர்களாய், தெய்வ நினைப்புள்ளவர் களாய். அன்புடையவர்களா யிருத்தல் வேண்டும். விளக்கு வைக்கும்போதும் தூசு துடைக்கும்போதும் நம்மவர்களில் சேர்ந்தவர்கள் புறத்தினின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதிசெய்தல் வேண்டும். யாவரும் யாதொரு காரியங் குறித்தும் தற்காலம் உள்ளே போதல் கூடாது. ஞானசபைத் திறவுகோல் ஒருவர் கையிலும் வெளிப்படவிருக்கப்படாது, அத்திறவுகோல்களை வேறொரு பெட்டிக்குள்வைத்து, அப்பெட்டியைப் பூட்டி, பொற்சபைக்குள் வைத்து அப் பெட்டித் திறவுகோலை ஆஸ்தானக் காவலுத்தரவாதியா யிருக்கின்றவர் கையில் ஒப்புவித்தல் வேண்டும். தொடர்ச்சி காலந் நேர்ந்த தருணம் எழுதுகிறேன்.

ஆங்கரிச ௵
ஆடி ௴ 5 உ
இங்ஙனம்
சி. இராமலிங்கம்

மேற்படி பத்திரிகையின்படி சில மாதம் நடந்துகொண்டுவந்தது. வள்ளலார் திருக்காப்பிட்டுக்கொள்ளும் சில தினத்திற்குமுன், மேற்படி சபையை மூடிவிட்டு சாவியைக் கொண்டுவந்து கொடுக்கும்படி வாங்கிக்கொண்டு, ஆண்டவர் வருங்காலத்தில் சபையானது தானே திறந்துகொள்ளும், அப்போது அது அற்புதமான கட்டமாகத் தோன்றும், அப்போது எல்லா அற்புத சித்திகளும் நடக்குமென்றார்கள். வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்டபின் மேற்படி சபையானது மூன்றுவருஷம் வரையில் மூடியிருந்தது. அதை யென்னத்திற்கு மூடிவைக்கச் சொன்னார்களோ அது அந்தத் திருவுள்ளத்திற்கே தெரியும். அப்படியிருக்க வெகுதானிய ௵ சித்திரை மாதம் முதல் தேதியில் அங்கிருந்த சாலை அபிமானிகளில் ஆறுபேர் கூடி, சபையைத் திறந்து பிரதி தினமும் தோத்திரமும், இன்னம் இப்படிப்பட்ட சில ஏற்பாடுகளை அவர்களுக்குள் பிரமாணமாகச் செய்துகொண்டு நடத்த ஆரம்பித்தார்கள். வள்ளலார் உத்தரவின்படி மூடிவைத்திருந்த சபையைத் திறந்ததே பெருங்குற்றம், அந்தச் சபை யெப்படிப் போனாலும் நமக்கென்ன, அதன்பேரில் மூடிவைக்கச் சொன்ன வள்ளலாருக்கு இல்லாத பொறுப்பு நமக்கில்லை, அல்லது திறந்தவர்களாவது வள்ளலார் திருக்கரத்தால் எழுதிக்கொடுத்த மேற்படி பத்திரிகையின்படியாவது நடத்தவேண்டும், அதையும் விட்டார்கள். சபையைத் திறந்த ஆறுபேரில் இந்தக் குருக்களும் ஒருவராதலால் சபை விஷயமாய் தான் தக்க வரும்படியைச் செய்வித்து, சபைகாரியங்களைத் தடையில்லாமல் நடத்திக்கொண்டு வருவதாய் மற்ற ஐவர்களுக்கும் இவர் அபிநயங்காட்டி, அவர்க ளிருக்கிறவரையில் மாறுபாடில்லாமல், அவர்கள் ஏர்ப்பாட்டின்படி நடத்திக்கொண்டுவந்தார். சபையைத் திறந்த ஆறுபேரில் சபை விஷயத்தில் முக்கியமாகக் கவனித்துக் கொண்டிருந்த மூவர் காலமாய்விட்டார்கள். அவர்கள் இறந்தபின் இவர் தான் பெற்ற சிவாசாரியார் பட்டத்திற்குத் தக்கபடி மெல்லமெல்ல சபையை வள்ளலார் கட்டளைக்கு விரோதமாக அடியோடே புரட்ட ஆரம்பித்தார்.

இவர் புரட்டிய ஒவ்வொரு சங்கதியும் இதனடியில் வருமாறு காண்க.

சபைவிஷயமாய் வள்ளலார் திருக்கரத்தால் எழுதிக்கொடுத்தபடி பத்திரிகையில், "இன்று தொடங்கி சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை யென்று வழங்கல்வேண்டும்" என்றார்கள்.

இப்போது சிவாசாரியார் பட்டத்தைத் தரித்துக்கொண்ட இவர்,சபை கட்டடம் மானியஞ் செய்யப்புகுந்து, அந்தத் திருவருள் வாக்கிற்கு விரோதமாக "ஞானானந்தவல்லி ஆனந்த நடராஜர் வீற்றிருக்கும் சபை" யென்று அடியோடே பெயரைப் புரட்டிவிட்டார்.

மேற்படி பத்திரிகையில் "இன்று தொடங்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது அருட்பெருஞ்சித்தி வெளிப்படும் வரையில் திருவாயிற்படிப் புறத்தில் தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல்வேண்டும், பித்தளை முதலியவற்றாற் செய்த குத்துவிளக்குகளும் மேலேற்றுகிற குளோப்புகளும் வேண்டா" மென்றார்கள்.

திருவாயிற்படிப் புறத்தில் தகரக்கண்ணாடி விளக்குவைத்தல் வேண்டு மென்பதற்கு விரோதமாக மூலஸ்த்தானத்தில் ஒரு நிலைக்கண்ணாடியை நாட்டி, அதற்குள் ஒரு அகண்டத்தை வைத்து, பித்தளை முதலியவற்றாற் செய்த குத்துவிளக்குகளாலும் மேலேற்றுகிற குளோப்புகளாலும் அலங்காரஞ் செய்து திரையைத் தூக்கி இதுவரையில் யாரும் பாராத அற்புதமான தீபத்தைக் காட்ட ஆரம்பித்தார். சுத்த சன்மார்க்கத்திற்குப் பிரத்தியக்ஷப் பிரமாணமேயல்லது அப்பிரத்தியக்ஷ பிரமாண மில்லையென்று வள்ளலார் சொல்லுக்கு இது விரோதமே.

மேலும், "திருவாயிற்படிப் புறத்திலிருந்து, விளக்கு வைக்கப்பட்டவர்கள் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள், அல்லது 12 வயதிற்குட்பட்டவர்கள், கரணசுத்தி தேகசுத்தி யுடையவர்களாயும், போக முதலியவற்றாற் சிறிதும் இச்சையில்லாதவர் களாய், தெய்வ நினைப்புள்ளவர்களாய், அன்புடையவர்களா யிருத்தல்வேண்டும். யாவரும் யாதொரு காரியங் குறித்தும் தற்காலம் உள்ளே போதல் கூடாது" என்றார்கள்.

இப்போது மேற்சொன்னபடி இருக்கப்பட்டவர்கள் குருக்களுடைய வம்சத்தார்தான். மற்றவர்களுக்கு அந்தத் தரம் கிடையாது. இல்லாதிருந்தாலும் இவருக்குக் காசி சித்தியானால் பெண்களும் உள்ளே பிரவேசித்துப் பார்க்கலாம்.

மேலும், மேற்படி பத்திரிகையில் விளக்குவைக்கும்போதும், தூசு துடைப்பிக்கும்போதும் நம்மவர்களில் நேர்ந்தவர்கள், புறத்தில்நின்று பரிசுத்தராய், மெல்லெனத் துதிசெய்தல் வேண்டும் என்றார்கள். இதற்கு விரோதமாக இவர் திரை தூக்கி நிலைக்கண்ணாடிக்குள் வைத்திருக்கும் அற்புதமான தீபத்தைக் காட்டும்போது ஒரு பக்கம் பரிசுத்தமான பிராமண கும்பல்கள் வேதகோஷ்டஞ் செய்கிறார்கள், மற்றொருபக்கம் தோத்திர கும்பல்கள் பெருங்கூச்ச விடுகிறார்கள், ஒரு பக்கம் பிடிலும் மத்தள ஓசையும், ஒரு பக்கம் மணிகளின் ஓசை, ஒரு பக்கம் பிரமதாளத்தின் ஓசை, ஒரு பக்கம் நகார் ஓசை, ஒரு பக்கம் கண்டாமணியின் ஓசை, ஒரு பக்கம் நாகசுரத்தின் ஓசை, ஒரு பக்கம் வெடி ஓசை, இந்த ஓசைகளால் பூமி அதிர்ச்சிகண்டு சபைக்குள் தூங்குகிற ஆண்டவரும் விழித்துக்கொள்கிறார். மெல்லெனத் துதிசெய்தல் வேண்டு மென்பதற்கு இதுகள் நேர்விரோதம்.

வள்ளலாருடைய விவகார காலத்தில் சேர்த்திருந்த கூட்டங்கள் பிடில் மத்தள முதலான கருவிகளுடன் தோத்திரஞ் செய்ய ஆரம்பித்தார்கள். சன்மார்க்கத்திற்கு இப்படிப்பட்ட விநோதங்கள் வேண்டியதில்லை. மன நெகிழ்ச்சியோடு தோத்திரஞ் செய்வதுதான் வழிபாடென்றார்கள். வெடியும் மனத்தைப் பிரமிக்கும்படியான சப்தத்தைத் தருவதால் அதுவும் வேண்டிய தில்லையென்று இப்படிப்பட்ட ஆரவாரச் செய்கைகளெல்லாம் தடை செய்துகொண்டிருந்தார்கள்.

மேலும், மேற்சொன்ன ஆறுபேருங்கூடி, சபையைத் திறக்கும்போது திரைக்குள் ஒரு பீடத்தை வைத்து அதன்பேரில் சரிகைகளால் அலங்கரித்த அணைகளையும் திண்டுகளையும் வைத்து, அதை குருபீடமாகச் சிந்தித்து, பூசித்துவந்தார்கள். இப்போது இவர் அந்தப் பீடத்தில், மினுக்கும்படி ஒரு பதக்கத்தைத் தொங்கவிட்டு, அதன்கீழ் இரண்டு பாதங்களைச் செய்துவைத்து, அந்தப் பதக்கத்தின் சூழ ஆபரணங்களாலும் வஸ்த்திரங்களாலும் புஷ்பங்களாலும் விக்கிரகத்தைப்போல் அலங்காரஞ்செய்து திரைதூக்கிக்காட்ட ஆரம்பித்தார். சென்ற தைப்பூசத்தில் சிலர் முன்னிலையில் இவர் சொன்னதாவது, இதுவரையில் சபையில் விக்கிரகத்தை வைத்திருப்பதாகச் சொல்லுவார்கள், அப்படிக்கில்லை. இனிக் கெந்தகச் செம்பையெடுத்து அதின் குற்றத்தை நீக்கி, சொர்ணமாக்கி, நடேச விக்கிரகத்தை வார்த்து வைக்கப்போகிறதாயும் ஆண்டவர் சம்மதமும், அப்படியே யிருப்பதாகச் சொன்னாராம். நடராஜரை வைத்தபின் ஞானானந்த வல்லி அம்மையும், கைலாசத்திலிருந்து வரவழைத்து, நடராஜருக்குத் தேர் முதலானதும் செய்வித்து, மங்கலக்கோலஞ் செய்விப்பதாயும், விஷ்ணுமூர்த்தியை வைகுண்டத்திலிருந்து வரவழைத்துச் சபையில் வைக்கப் போகிறதாயும் சொன்னாராம். இனி, இந்தச் சுவாமிகளெல்லாம் சபையில்வந்து விஜயஞ்செய்து வள்ளலார் திருவாக்கிலிருந்து வெளிப்பட்ட எல்லா அற்புத சித்திகளும் நடத்தப்போகிறபடியால் இப்போதே அந்தச் சுவாமிகளின் விநியோகத்திற்குச் சபையில் தேங்காய்கள் உடைத்தார், புஷ்பத்தால் அர்ச்சனை செய்தார். மணி ஆட்டினார். சுவாமிகளெல்லாம் சபையில் வந்து விஜயஞ் செய்தால் அவர்களுக்குப் பிரதி தினமும் நைவேத்தியங்களுக்குப் பொருள்வேண்டுமே. அதற்கு உண்டி தவலையும் வைத்துவிட்டார். சுவாமிகளெல்லாம் சபையில்வந்து விஜயஞ்செய்தபின் நம்போல் ஆன்மாக்களின் பக்குவத்திற்குத் தக்கபடி முத்தியைக் கொடுக்கவேண்டுமே, அதற்கு அந்தச் சபையை பஜனையோடு வலம்வரும்போது தன்னைச் சூழ்ந்திருந்தவர்களை நோக்கி சரியை, கிரிகை, யோகம், ஞானம் இந்த நான்கையும் அநுஷ்டிப்பவர்கள், அடையும்படியான பதமுத்திகளைக் கொடுக்கத்தக்க இடம் இதுஇதுவென்று குறிப்பிட்டு, அந்த நான்கு விடத்திலும் பஜனையோடு நின்று, அங்கங்கே தேங்காய்கள் உடைத்து அர்ச்சனைசெய்து மணி ஆட்டி ஜாலங்காட்டினார்.

இதன்றி வள்ளலார் இருந்தவிடத்தில் இரண்டு இரும்பு பெட்டிகளிருந்தன. அதில் ஒரு பெட்டிக்குத் தீவார்த்தனை முதலான உபசாரங்கள் செய்து கொண்டிருந்தார்கள். வள்ளலார் திருக்காப்பிட்டுக்கொள்ளும் கொஞ்ச தினத்திற்கு முன், தம்மைச் சூழ்ந்திருந்தவர்களை நோக்கி, இனி அந்தப் பெட்டியினிடத்தில் யாரும் லட்சியம் வையாதீர்கள். அதில் ஒன்றுமில்லை யென்றார்கள். இந்தப் பெட்டிகள் வள்ளலார் திருக்காப்பிட்டுக்கொண்ட அறையில் 4 வருஷம் வரையிலிருந்தது. அதை யாருக்குந் தெரியாமலே களவு செய்து கொண்டுவந்து விட்டார். இவர் களவுசெய்த கொஞ்சநேரத்திற்குப்பின், அங்குள்ளவர்களுக்குந் தெரிந்து, இவரைத் தேட ஆரம்பித்தார்கள், மறைந்தார். அப்போது இவர் செய்த களவான காரியத்திற்கு அத்தருணம் அங்கிருந்த அனேகர் அனேக விதமான எண்ணங் கொண்டார்கள். மரபுக்கு விரோதமான காரியஞ் செய்யப் படாதென்று ஒருவருக்கொருவர் சமாதான வார்த்தைகளால் மௌனத்தை யடைந்தார்கள். இல்லாவிட்டால் அப்போதே இவர் இராஜாங்கத்தார் தண்டனைக்கி ஆளாகி இருப்பார். அந்தப் பெட்டிகளில் என்னவிருந்ததோ இவர் என்ன செய்தாரோ அது தெரியாது, இப்போது அந்தப் பெட்டிகளை, இவர் பெயரிட்டிருக்கும் பொன்னம்பலகாதர், வெள்ளியம்பலகாதர் இருக்கு மிடத்தில்வைத்து, திரைசாத்தி அதில் இரசகுளிகைக ளிருப்பதாகச் சிலருக்குச் சொல்லி, திரைதூக்கி ஜாலங்காட்டிக் கொண்டுவருகிறார். இதுவும் அந்த வள்ளலார் கட்டளைக்கு விரோதமே.

இதன்றித் தங்கள் வீட்டின்முன் ஒரு பிள்ளையார்கோயில் கட்டி, காசியி லிருந்து கேட்ட வரத்தைத் தரும்படியான ஒரு பிள்ளையாரை வரவழைத்ததாகச் சொல்லி, அதை மேற்படி கோயிலில்வைத்து, கும்பாபிஷேக முதலானதுஞ் செய்து, இப்போது பிரதிதினமும் மணி ஆட்டி பூசை நைவேத்திய முதலானதுஞ் செய்துகொண்டு வருகிறார். இதுவும் வள்ளலார் கொள்கைக்கி விரோதமே.

மேலும் சாலை நிலங்களுக்கு அருகாமையில் ஒரு பெருமாள் கோயில் கட்டியிருக்கிறார். இனி அதில் பெருமாளை வைக்கப்போகிறார்.

இதன்றித் தைப்பூசகாலத்தில் ஆலயங்களில் திருவிழாக்காட்சி நடத்துவது போல், மூன்று தினத்திற்கு முந்தியே துஜாவர்ணக்கொடியை நாட்டி, பிராமண கும்பல்களைச் சேர்த்துக்கொண்டு, ஒரு கலசத்தை நாட்டி, அதை யந்திர ஆவாகனத்தால் உயிர்ப்பித்து, மேற்படி பிராமண கும்பல்களால் வேதகோஷ்டஞ் செய்வித்து, அந்தக் கோஷ்டத்துடன் அந்தக் கலசத்தை சபைக்குள் வைத்து, இவருடைய திருவிழா பரியந்தம் அந்தப் பிராமண கும்பல்களைக் கொண்டு சபையில் ஓமத்தை வளர்த்தி வேதபாராயணஞ் செய்விக்கிறார். இதுவும் விரோதமே.

இதன்றிச் சபையில் ஓமத்தை வளர்த்தி பிள்ளையில்லாதவர்களுக்குப் பிள்ளைவரங் கொடுக்கவும், பேய்ப்பிடித்தவர்களுக்குப் பேய் ஓட்டவும் ஆரம்பித்தார்.

இவர் அங்கே பிள்ளையார் கோயில் கட்டியதற்குக் காரணம் வள்ளலார் சாலையிலிருந்தபோது பிள்ளையார் கோயில், சுப்பிரமணியர் கோயில் இதுமுதலானதும் கட்ட அஸ்திவாரம் போட்டிருப்பதாயும், அதற்கு பிளான் முதலானதும் ஏற்பட்டிருப்பதாயும், அதைத் தான் கட்டி பூர்த்திசெய்ய ஆண்டவர் வந்து இவருடைய பரிசுத்தமான தேகத்தில் நுழைந்து சொற்பனத்தில் சொல்லுவதாயும் சொல்லுகிறார். இவருடைய சொற்பனப்பிதற்று உண்மையாக விருந்தால் எல்லாம் வல்லக் கடவுள், சித்தத் திருக்கோலத்துடன் வெளிப்பட்டு, இவ்வுலகின்கண்ணே சுத்த சன்மார்க்கத்தை விளக்கஞ் செய்யப்போகிறதாகக் குருமுகூர்த்தமாக எழுந்தருளியிருந்த வள்ளல், பாசுரங்களாலும் விவகாரங் களாலும் பறையடித்திருக்கும் வாக்கியங்களெல்லாம் பொய்யே, பொய் சொல்லாத இந்த சத்தியர் சொற்பனப் புளுகு மெய்யே.

நேயர்களே! எல்லாம் வல்ல சித்தன் திருக்கோலத்துடன் வெளிப்பட்டு, சமரச சுத்த சன்மார்க்கத்தை இவ்வுலகின்கண்ணே நாட்டப்போகிறதாகச் சொன்ன வள்ளல் "சமரச சுத்த சன்மார்க்கம்" என்பதற்குப் பொருள் விளக்கிக்காட்டியதை இதனடியிற் காண்க.

சமரசமென்பது எல்லா அந்தங்களினது அந்தமுந் தனக்குப் பூர்வமாக்கி தான் உத்தரத்தில் நின்று மருவியதால் சமரசமாச்சுது. இதற்கு நியாயம்:

விந்து பரவிந்து இவ்விரண்டையும் மறுக்க சுத்தவிந்து வந்ததுபோலும், சிவம் பரமசிவம் இவ்விரண்டையும் மறுக்க சுத்தசிவம் ஆனதுபோலும், சமய சன்மார்க்கம் மத சன்மார்க்கம் இவ்விரண்டையு மறுப்பது சுத்த சன்மார்க்கம்.

சுத்தமென்பது ஒன்றுமல்லாதது ஆதலால் சுத்தமென்பது சன்மார்க்க மென்னுஞ் சொல்லுக்கு முன்வந்ததால் சமய மதங்களின் அநுபவங்களைக் கடந்தது. இதன்பொருட்டே சமரச சுத்த சன்மார்க்கமென்று சொல்லப்பட்ட தென்றார்கள்.

மேலும், "நான் முதலில் சைவசமயத்தில் லட்சியம் வைத்துக்கொண்டிருந்தது, இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அந்த லட்சியம் இப்போது எப்படிப் போய்விட்டது. நான் லட்சியம் வைத்திருந்ததற்குச் சாக்ஷி வேறே வேண்டியதில்லை, நான் பாடியிருக்கும் திருவருட்பா புத்தகமேபோதும். அப்போது அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது, இப்போது அதை விட்டதினால், ஆண்டவர் என்னை ஏறாத மேனிலைமேல் ஏற்றினார். அந்தச் சமயத்தில் வைத்திருந்த லட்சியந்தான் இந்த நிலையில் என்னைத் தூக்கிவிட்டதென்றாலோ, அந்த லட்சியம் தூக்கிவிடவில்லை, என்னை இந்த இடத்திற்குத் தூக்கிவிட்டது தயவுதான், தயவுக்கு ஒருமைவேண்டும். ஒருமையிருந்தால்தான் தயவுவரும், தயவு இருந்தால்தான் பெரியநிலையில் ஏறலாம். தயவை விர்த்திசெய்வதற்குத் தடையாக இருப்பது சாதி சமய முதலானவைகள். இவைகளைவிட்டு பொதுநோக்கம் வந்தாலொழிய தயவு விர்த்தியாகாது என்றார்கள்."

மேலும்,"இப்போதிருக்கும் வேதாகம புராண இதிகாச முதலான கலைகள் யாவையிலும் லட்சியம் வையாதீர்கள், அதுகளில் ஒன்றிலாவது தெய்வத்தின் உண்மையை கொஞ்சமேனும் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்துவிட்டு கைலாசபதி யென்றும் வைகுண்டபதி யென்றும் சத்திய லோகாதிபதி யென்றும் பெயரிட்டு சாதாரண மனுஷனைப் போல் கையுங்கால் முதலான அவயவங்களிருப்பதாய்க் கற்பிக்கிறார்கள். கடவுள் ஆன்மவியாபக மாகிய மனித தேகத்தில் காரியப்படுவது உத்தமமாக இருக்க, விக்கிரக பூததாரு முதலியவைகளில் வெளிப்படுத்திக்கொள்வது மந்த நியாயம், அதில் தோன்றி அநுக்கிரகிப்பதாகச் சொல்வது ஜாலம்" என்றார்கள்.

மேலும்,

ஆறாம் திருமுறை : நடராஜபதி மாலை - வள்ளலார்

பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம் பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல பேதமுற் றங்கும்இங்கும்

போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண் போகாத படிவிரைந்தே

புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப் பொருளினை உணர்த்திஎல்லாம்

ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ என்பிள்ளை ஆதலாலே

இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே றெண்ணற்க என்றகுருவே

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்திருள் அகற்றும்ஒளியே

நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு நீதிநட ராஜபதியே.


ஆறாம் திருமுறை : ஞானசரியை - வள்ளலார்

குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்

வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது

மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்

பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்

புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்

செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்

சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.


என்றார்கள்.

மேலும், இப்போது இவர் விக்கிரகங்களை வைத்து தேவஸ்தான மாக்கு வதற்கு ஜாலங்காட்டும் சபையில் யாவரும் துதிப்பதற்குச் "சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்" என்று ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுத்தார்கள். இதை ஆறாவது திருமுறையில் பார்க்கலாம். இதில் "எல்லா முடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக்கடவுளே, இது தொடங்கி யெக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம் ஆசிரம முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல்வேண்டும்" என்றார்கள்.

இப்படியெல்லாம் பகிரங்கத்தில் சொன்ன வள்ளலார் இவருக்கு மாத்திரம் தனித்து சொற்பனத்தில் வந்து சபையில் நடேசரை வைக்கவும், கணபதிக்கும் சுப்பிரமணியருக்கும் பெருமாளுக்கும் கோயில் கட்டும்படியாகச் சொன்னார்? ஆனால் அவர் வஞ்சனையுள்ளவரே. இவர் வள்ளலாரிடத்தில் வந்து அடுத்த காலத்தில் சாதி சமய முதலான பேதங்கள் தனக்கில்லை யென்று பூணூல் முதலானதும் அறுத்துப்போட்ட இவர், 'பழைய குருடி கதவைத் திறவடி' யென்ற வாக்கியத்திற்கு ஒப்பாக, மறுபடியும் இவர் வேடந் தரித்துக்கொண்டது என்னை? இவர் சிவாசாரியார் பட்டம் தரித்துக்கொண்டவுடனே இவருடைய சிவாநுபவத்தில் வள்ளலார் சொன்ன சமரச சுத்த சன்மார்க்கத்தைவிட, மேலான மார்க்கம் ஒன்று தோற்றப்பட்டது. அது இதுவரையில் உலகத்தில் இல்லை, அது எது? சபையில் ஸ்வர்ண வில்வமாலை சாத்தி நடேசரை வைத்து ஞானானந்தவல்லி அம்மையை நடேசருக்கு கல்யாணஞ் செய்வித்து, கணபதியையும் சுப்பிரமணியரையும் பெருமாளையும் ஸ்தாபித்து, உலகறிய திருவிழா செய்விப்பதேயாம். அந்தக் காலத்தில் இந்தச் சிவாநுபவச்செல்வர் ஏதேனும் அற்புதத்தைக் காட்டுவரோ, காட்டுவார். என்ன அற்புதத்தைக் காட்டுவார்? ஆண்டவர் சித்தத் திருக்கோலத்துடன் வெளிப்படும்போது இறந்தவர்கள் எல்லாம் எழுந்திருப்பார்க ளென்றார்கள். இவருடைய திருவிழாக் காலத்தில் இருப்பவர்களெல்லாம் இறப்பார்கள். ஆனால் அதைவிட இது விசேஷ அற்புதமே. அது பின்னால் நடப்பது இருக்கட்டும், இப்போது வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்கத்தை நிலைநாட்டவந்த இடத்தில் இவர் அதற்கு மாறான காரியங்களைச் செய்வாரேயானால் அந்த வாக்கிலிருந்து ததும்பி வழிந்திருக்கும் மேற்சொன்ன மஹாவாக்கியங்களுக் கெல்லாம் இவர் கேட்டவர்களுக்கு என்ன விடை கொடுப்பார்? முழு பூசனைக்காயை இவர் உண்ணுஞ்சோற்றில் மறைப்பரோ, மறையாது. அல்லது மேற்சொன்ன வாக்கியங் களுக்கெல்லாம் வேறே விதி கற்பிப்பரோ, கற்பிக்க முடியாது. அல்லது அவர் சொன்ன வாக்கியங்க ளல்லவென்பரோ சொல்ல முடியாது. ஆனால் பின் என்னதான் சொல்வார், விழிப்பார், இது அறியாமைதான். என்ன செய்யலாம், யாரும் இல்லாத ஊரில் அஸ்வமேத யாகஞ் செய்யப் புகுவதுபோல் இவர், பொருளாலும் தேகத்தாலும் உழைப்பு எடுத்துக்கொண்டு, சம்பாதித்த நிலங்களைப்போலவும், கட்டிவைத்த சபையைப்போலவும், வள்ளலார் திருக்குறிப்பின்படி கட்டியிருக்கும் சபையை, அந்தக் குறிப்புக்கு விரோதமாக தேவஸ்தானமாக்குவதற்குத் தன் இஷ்டப்படி புதுக்குவதும், சுத்த சன்மார்க்க மரபுக்கு விரோதமாக ஞானசபையில் விக்கிரகங்களை வைப்பதும் பிள்ளையார் கோயில் கட்டுகிறதும் சுப்பிரமணியர் கோயில் கட்டுகிறதும் பெருமாள் கோயில் கட்டுகிறதும் குளங்கள் வெட்டுகிறதும் கிணறுகள் வெட்டுகிறதும் இன்னம் பற்பல திருப்பணிகள் செய்யப்போகிறதாக இவர் பிரசித்தஞ் செய்திருப்பதைப் பார்த்தால் இவருக்கு இருக்கிற சுதந்தரம் மற்ற அபிமானி களுக்கில்லை போலும். இவர் அந்த வள்ளலாருக்கு முதற் பிள்ளையாயிருப்பரோ அப்படியிருந்தால் தகப்பன் குறிப்பின்படி பிள்ளை யிருக்கவேண்டுமே. அப்படியில்லாதபோது இவர் அந்தத் தகப்பன் இடத்திற்கு அருகராகரோ, ஆகார். பொருள் சம்பாரிக்க வேடந்தரித்த இவர் எந்த இடத்தில் அந்த வேடத்தைக் காட்டி பொருள் சம்பாரிக்க வேண்டுமோ, அதைவிட்டு அந்த மார்க்கத்திற்குரிய அனேகர் அபிமானித்திருக்குமிடத்தில் இவர் வேடத்தைப் பூட்டி, ஜாலங் காட்டுவதென்னை? எப்போ இவர் பிராயச்சித்தஞ் செய்து கொண்டு அந்த மரபுக்கு விரோதமான வேடத்தைத் தரித்தாரோ, அப்போதே அந்த மரபுக்கு நாம் எள்ளளவும் பாத்திரன் அல்லவென்று ஒதுங்குவதே இவருக்கு நன்மையாம். இல்லாவிட்டால் ஐயோ இவர் அவமதிக்கப்படுவர்.

நேயர்களே! முன்னே இவர் வந்த காலத்திலிருந்த உண்மையான நிலையைச் சொன்னோம். பின்பு இவர் மாறுபட்டு வள்ளலார் திருக்குறிப்பிற்கு நேர்விரோத மாகச் செய்யும் காரியங்களைச் சொன்னோம். இப்போது இவர் விஜய வருஷம் ஆனி மாதம் 22தேதியில் பிரசித்தஞ் செய்திருக்கும் விளம்பரத்தின் ஒவ்வொரு பிரகரணத்தின் உண்மை யெப்படிப்பட்டதென்று விசாரிப்போம்.

இவருடைய விளம்பரம் முதற் பிரகரணத்தில் ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை தேவஸ்தான தருமஸ்தானங்களின் டிரஸ்டி யென்றார். இவருடைய போலி டிரஸ்டி பட்டத்தைக் குறித்துப் பின்னால் பேசுவோம்.

திருவருட்பிரகாச வள்ளலார், சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை யென்று வழங்கல்வேண்டுமென்று திருக்கரத்தால் எழுதிக்கொடுத்திருக்க, இவர் குருக்கள் பட்டத்தை மாற்றி சிவாசாரியார் பட்டம் பெற்றுக்கொண்டது போல், சத்திய ஞானசபையையும் தருமச்சாலையையும் தேவஸ்தான தருமஸ்தானமென்று புரட்டியதென்னை? ஞானசபை தேவஸ்தான மென்றிருப் பதால், ஞானசபை வேறு, தேவஸ்தானம் வேறா? அப்படியானால் ஞானசபை யென்பது எங்குளது? தேவஸ்தான மென்பது எங்கிருப்பது? இரண்டும் ஒன்றெனில் ஞானசபை தேவஸ்தானமாகுமா? பஞ்சபாண்டவாள் மஞ்சம் காலைப்போல மூவரென்று இருவிரலைச் சுட்டிக்காட்டியதுபோல் பரிகாசத்துக்கு இடந்தருமே. ஆகிலும் ஞானசபையென்பது ஒன்று அங்குளதென்று யாவருக்கும் தெரிந்த விஷயமே. அப்படிப்பட்ட ஞானசபையை இவர் தேவஸ்தானமாக்கு வதற்கு எண்ணங்கொண்டது வள்ளலார் கட்டளைக்கு முற்றும் விரோதமே

இவருடைய விளம்பரம் இரண்டாவது பிரகரணத்தில் "ஞானானந்தவல்லி சமேத ஆனந்த நடராஜப்பெருமானும் தனிப்பெருங்கருணா நாயகி சமேத அருட்பெருஞ் சோதீஸ்வரரும் வெள்ளியம்பலநாதர் பொன்னம்பலநாதரும் எழுந்தருளியிருக்கும் தேவஸ்தானமாகிய மேற்படி சத்தியஞான சபைக்கும்" என்றார்.

இவர் பெயரைப் புரட்டிய தேவஸ்தானத்தில் எத்தனை நாதர் எழுந்தருளி யிருக்கின்றார்கள். ஞானானந்தவல்லி சமேத ஆனந்த நடராஜப்பெருமான், ஒன்று. தனிப்பெருங்கருணை நாயகி சமேத அருட்பெருஞ்சோதீஸ்வரர், ஒன்று. பொன்னம்பலநாதர், ஒன்று. வெள்ளியம்பலநாதர்,ஒன்று. இந்த நால்வரும் சபையில் எழுந்தருளியிருப்பது உண்மையா? உண்மையென்றால் இந்த நால்வரும் ஒன்றா? அல்லது வெவ்வேறு சுவாமிகளா? இவர்களை யாவரால் ஸ்தாபிக்கப்பட்டது? அருட்பெருஞ்சோதீஸ்வரர் என்பதில் சோதி வடிவத்துக்கு மேல் ஈஸ்வரசொரூபம் ஒன்று உளதென்று காண்கிறது. இந்த நவீன வார்த்தைக்கு இந்தப் போலி சிவாசாரியரே சமாதானஞ்சொல்லி எல்லோருக்கும் திர்ப்தி செய்வாராக.

இவருடைய விளம்பரம் 3வது பிரகரணத்தில் "திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்கப் பிள்ளை அவர்களால் வேட்டவலம் அருணாசல வசந்த கிருஷ்ணவாணாதராய அப்பாசாமி பண்டாரியாரிடம், தரும பரிபாலனத்தைச் சென்ற ஸ்ரீமுக வருஷம் ஒப்பிவைக்கப்பட்டு அவர் உயிலின் படிக்கு அவருடைய சுவிகிருதரான ம-ரா-ரா-ஸ்ரீ அ.வ.கி. வாணாதராய சக்கிரய்யா பண்டாரியார் மேற்படி ஷேத்திரத்தின் தருமபரிபாலனத்தை நிருவகித்துவந்து விரோதி வருஷம் ஆவணி மாதம் முதல் டிரஸ்டி பட்டத்தைப் பத்திரமூலமாகத் தனக்கு ஒப்புவித்து அவ்வருஷமுதல் மேற்படி ஷேத்திரத்தில் தேவஸ்தான தருமஸ்தான பரிபாலனத்துவம் தன்னால் நிருவகித்து" வருவதாகச் சொல்லுகிறார். இது அற்புதத்திலும் அற்புதம். வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளு முன்னரே வள்ளலார் கட்டளையின்படி இவர் அந்த இடத்தை விட்டு ஓடிப்போயினரே, அப்படியிருக்க ஜமீன்தாரருக்கு தருமபரிபாலனத்தை ஒப்பிக்கப்பட்டதை வள்ளலாரை இடைவிடாமல் சூழ்ந்துகொண்டிருந்த காரியஸ்தர்களுக்குத் தெரியாமல் ஓடிப்போயிருந்த இவருக்கு மாத்திரம் தெரிந்தது எப்படி?

நேயர்களே! கேளுங்கள். வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் 10 தினத்திற்குமுன், மேற்படி ஜமீன்தாரரை வரவழைத்து, ஆண்டவர் தன்னை கொஞ்சதினம் மறைத்துவைக்கப் போகிறதாயும் அப்போது இவ்விடம் ஆதரவற்றிருக்கும் சில ஏழைகளை சிலநாள் கைவிடாமல் பாதுகாத்துக் கொண்டு வந்தால், ஆண்டவர் உனக்கு ஒன்றும் குறைவைக்கமாட்டார் என்றார்கள். வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்டபின் 15 நாள்வரையில், வள்ளலார் உத்திரவின்படியே, சில ஏழைகளைக் காப்பாற்றிக் கொண்டுவந்தார். இந்தப் புண்ணிய புருஷருடைய துர்ப்போதனையால் முற்றும் அவர்களைக் கைவிட்டு, இவருடைய ஜாலவலையில் அகப்பட்டுக்கொண்டார். இந்த ஜமீன்தார் கைவிட்ட ஏழைகளின் பரிதாபத்தை அங்கு அத்தருணமிருந்த சில காரியஸ்தர்கள், அவரவர்களால் கூடிய வரையில் கையொப்பம் இட்டுக்கொண்டு, இரண்டு வருஷகாலம் அந்த ஏழைகளைக் காப்பாற்றிக் கொண்டு வந்தார்கள். இது யாவருக்குந் தெரிந்த விஷயமே. சில ஏழைகளைக் கைவிடாமல் கொஞ்சகாலம் காப்பாற்றிக்கொண்டு வாவென்று சொன்னார்களே யல்லது தேவஸ்தான தருமஸ்தான பரிபாலனத் துவத்தை ஒப்பித்தாரென்று இவர் கற்பித்துச் சொல்வது பொய்யே. மேலும், வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்டபின் சுமார் 10 வருஷம்வரையில், மேற்படி இடத்தைச் சேர்ந்த அபிமானிகளும், மேற்படி ஜமீன்தாரரும் கூடி, அனேகதடவை சபை முதலான இடங்களைப் பற்றி நடவடிக்கை நடத்தியிருக்கிறார்கள். எந்தக் கூட்டத்திலாவது அந்த ஜமீன்தார் தருமபரிபாலனத்துவம் உடையவரென்று எந்த ரிகார்ட்டிலாவது ஏற்பட்டிருக்க வேண்டுமே, இல்லையே. வள்ளலார் திருக்காப்பிட்டுக்கொண்ட 7வது வருஷத்தில் இராஜாங்கத்தார், போத்திபட்டா செய்ய ஆரம்பித்தபோது, சாலை சம்பந்தமுடையவர்களை விசாரிக்க, உத்தியோகஸ்தர்கள் ஆறுமுக முதலியார், நயினா ரெட்டியார், வெங்கடேசய்யர், சபாபதி குருக்கள் இந்த நால்வரையும் குறிப்பிட்டார்கள். இந்த நால்வரையும் ஏஜண்டுகளாக்கி பட்டா மாற்றல்செய்ய 1880 ௵ அக்டோபர் மாதம் டிஸ்ட்ரிகட்டு கெஜட்டில் பிரசுரஞ் செய்தார்கள். அதை இந்த நால்வரும் கேழ்விப்பட்டுத் தங்கள்பேரில் பட்டா இருக்கப்படாது தருமச்சாலையின்பேரில் இருக்கவேண்டுமென்று விண்ணப்பித்தார்கள். அதை இராஜாங்கத்தார் கவனிக்காமலே மேற்படி நால்வரை ஏஜண்டுகளாக்கி பட்டா செய்துவிட்டார்கள். மூன்று வருஷம் இந்த நால்வரும் கூடி தங்கள் தங்களுக்கு இயன்ற மட்டும் நிலத்தீர்வையை மேற்படி ஜமீன்தாரிடத்திலும் மற்ற சில அபிமானிகளிடத்திலும், கிஞ்சித்து உதவியைப்பெற்றுத் தீர்வை செலுத்திக்கொண்டு வந்தார்கள். 1888 ௵ மேற்சொன்ன நான்கு ஏஜண்டுகளும் மேற்படி ஜமீன்தாரரை தருமகர்த்தாவாக நேமகஞ்செய்து பட்டா அவர்பேரில் செய்துகொள்ளும்படியாகவும் தீர்வை முழுதும் செலுத்திக் கொண்டு வரும்படியாகவும் கேட்டுக்கொண்டு, அவர் சம்மதியின்பேரில் தருமகர்த்தாவாக இன்னவரை நேமகஞ் செய்திருக்கிறோம், அவர்பேரில் பட்டாசெய்யும்படி இந்த நால்வரும் செய்த விண்ணப்பத்தை கோர்ட்டிலும் கெஜட்டிலும் பார்க்கலாம். இந்தத் தருமகர்த்தா பட்டமும் இந்த நால்வரால் கொடுக்கப்பட்டதே யல்லது மற்ற அபிமானிகளுக்குத் தெரியாது. இந்த ஜமீன்தார்பேரில் பட்டா ஆனவுடனே அவர் காலமாய்விட்டார். இப்போதிருக்கும் அ.வ.கி. வாணாதராய சக்கிரய்யா பண்டாரியின்பேரில் போத்திபட்டா செய்ய கெஜட்டில் பிரசித்தஞ் செய்தார்கள். இந்த ஜமீன்தார் இந்தக் குருக்களுடைய சொல் வண்ணம் நடக்கத்தக்கவராக இருந்தபடியால் மேற்படி ஜமீன்தார்பேரில் பட்டா செய்யப்படாது வேறொருவரை நேமகஞ் செய்கிறோம். அவர்பேரில் பட்டா செய்யவேண்டுமென்று ஜமாபந்தி காலத்தில் ஆக்ஷேபித் தார்கள். அப்படியே ஏற்படுத்திக் கொண்டுவரும்படி உத்தரவுசெய்து அந்த வருஷம் பட்டா செய்வதை நிறுத்தி மறுவருஷம் வேறொருவரை நேமகஞ்செய்து கொண்டு போகும்முன்னமே இந்த ஜமீன்தார்பேரில் பட்டா செய்துவிட்டார்கள். இந்த ஜமீன்தாரருக்குப் பட்டா மாற்றுதலை மாத்திரம் செய்ய இராஜாங்கத் தாருக்குச் சுதந்தரமேயல்லது தருமகர்த்தா பட்டத்தை மாற்றுவதற்கு அவர் களுக்கு யாதொரு சுதந்திரமுமில்லை. இது அந்த இடத்தைச் சேர்ந்த அபிமானி களால் ஏர்ப்படுத்தவேண்டிய கடமை. அப்படியிருக்க யாரால் இவருக்கு தருமகர்த்தா பட்டம் வந்திருக்கலாம். கிரமமாக ஏர்ப்பட்ட தருமகர்த்தர்களுக்கே தங்கள் சுதந்தரமாக டிரஸ்டியை ஏர்ப்படுத்திக்கொள்ள அதிகார மில்லாதிருக்கும் போது இன்னவிதமாகத் தருமகர்த்தா பட்டம் தனக்கு வந்ததென்று தெரிந்துகொள்ளாமல் இந்த ஜமீன்தார்தான் இவருக்கு டிரஸ்ட்டி பட்டம் எப்படிக் கொடுப்பார்? இவர் டிரஸ்டி பட்டம் கட்டிக் கொண்டது எப்படியென்றால், இந்த ஜமீன்தாரருக்கு மேற்படி குருக்களின்பேரில் வந்த ஏதோ சில மனஸ்தாபத்தால் தன் பேரிலிருக்கும் சாலைபட்டா நிலத்தை சில காரியஸ்தர் களின் பேரில் மாற்றிவிட எத்தனித்தார். அதை யாரும் கவனிக்கவில்லை. அதன்பேரில் இராஜிநாமா கொடுத்துவிடுவதாகச் சொல்லி அனுப்பினார். அத்தருணம் இந்தக் குருக்கள் வேட்டவலம்போய் ஜாலவித்தைகளால் அவரை மயக்கி, அவருக்குத் தருமகர்த்தத்துவம் இருப்பதாகக் காட்டி, டிரஸ்டி அதிகாரம் தனக்குக் கொடுத்தால் சாலை விஷயத்தில் தங்களுக்கு ஒருவித தொந்திரவுமில்லாமல் தீர்வை முதலானதும் நானே செலுத்திக் கொண்டு வருகிறேன், பட்டா மாத்திரம் தங்கள்பேரில் இருக்கட்டுமென்று சொன்னார். இதை அவர் ஒப்புக்கொண்டார். உடனே முத்திரைக் கடிதம் வாங்கி மஞ்சக்குப்பத்தில் சிலரைக் கொண்டு தனக்கு வேண்டிய அங்கங்களெல்லாம் அதில் எழுதி, மேற்படி ஜமீன்தாரிடத்தில் கையெழுத்துவாங்கி ரிஜிஸ்டர் செய்துகொண்டார். அந்த வருஷம் தீர்வை செலுத்தும்படி மேற்படி ஜமீன்தார் இவரை நிர்ப்பந்தஞ்செய்ய, மறுபடியும் அவரிடம்போய் மயக்கி, தீர்வையை அவரையே செலுத்தும்படி செய்தார். இவர் ரிஜிஸ்டர் செய்துகொண்டு வந்தவுடன் மீசையுள்ள ஆண்பிள்ளைகளாக இருந்தால் வாருங்கள் நான் போலி டிரஸ்டி பட்டம் கட்டிக்கொண்டேன் என்று சில பராக்கிரமங்களைக் காண்பித்து நவநவ விதமான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார். பின்பு சில அபிமானிகள் இதைக் கேழ்விப்பட்டு மேற்படி ஜமீன்தாரிடம்போய். உங்களுக்குத் தருமகர்த்தத்துவம் இல்லாதிருக்க, அவருக்கு நீங்கள் டிரஸ்டி பட்டம் எப்படிக் கொடுத்தீர்களென்று கேட்க, என்னை மயக்கி கையெழுத்து வாங்கிக்கொண்டு போய்விட்டார். "மயக்குந் தன்மையில் ஆயிரம் தாசியானாலும் அவருக்கு ஒப்பாக மாட்டார்"களென்றார். இதைப்பற்றி நாங்கள் உங்களையும் கோர்ட்டு மூலமாக வரவழைப்போமென்று சொன்னதற்கு, நான் கொடுத்த அதிகாரத்தை வாங்கிக்கொள்ளுகிறேனென்று சொன்னவர் இன்னம் இவர் மயக்கத்திலேயே அழுந்தியிருக்கிறார்.

இப்போது சொல்லிக்கொண்டுவந்த சரித்திரத்தால் அருணாசல வசந்த கிருஷ்ணவாணாதராய அப்பாசாமி பண்டாரியாரிடம் தரும பரிபாலனத்தை ஒப்பிக்கப்பட்டதென்று இவர் சொல்லப் புகுந்தது உண்மையா யோசியுங்கள். சில ஏழைகளைக் கைவிடாமல் சில காலம் பாதுகாத்துக்கொண்டு வரும்படி வள்ளலார் சொன்ன வாக்கியத்தை 15 தினத்திற்குள்ளவே அந்த ஏழைகளையும் கைவிட்ட சங்கதி முன்னமே சொல்லியிருக்கின்றது. சில ஏழைகளைக் காப்பாற் றென்று சொன்ன சொல்லை இந்த ஷேத்திரத்தின் தருமபரிபாலனத்தை ஒப்பிக்கப்பட்டதென்று இவர் கற்பித்துச் சொல்வது என்னை? அல்லது இப்போதிருக்கும் ஜமீன்தார் கடந்த சித்திரை பானு வருஷம் முதல் விரோதி வருஷம் வரையில் இந்த ஷேத்திர தருமபரிபாலனத்தை நிருவகித்து வந்ததாகச் சொல்லுகிறார். இவர் தருமபரிபாலனஞ் செய்ததென்னை? சத்திய தருமச் சாலையில் அனேக வருஷங்களாக வள்ளலாருடைய முக்கியக் குறிப்பின்படி அபிமானிகளில் சிலர் அந்தத் தருமபரிபாலனத்தை வழுவில்லாமல் நடத்திக்கொண்டுவர ஜமீன்தாரிடம் டிரஸ்டி பட்டம் பெற்றுக்கொண்ட இவரும் விரோதி வருஷம் ஆனி மாதம்முதல் தருமஸ்தான பரிபாலனத்துவம் தன்னால் நிருவகித்து வருவதாக இவருடைய விளம்பரத்தில் பொய்சொல்லப் புகுந்ததென்னை? இவர் அந்தத் தருமஸ்தானத்தை எட்டிப்பார்த்து 10 வருஷமாகின்றதே! எந்த இடத்தில் இவர் தருமபரிபாலனத்தை நடத்தினார். கேளுங்கள் நேயர்களே! அப்போது இவர் சொல்லப் புகுந்த பொய் வெளியாகும். மேற்சொல்லி வந்த சரித்திரத்தால் மேற்படி ஜமீன்தாரருக்கே தர்மகர்த்தத்துவம் இல்லாதிருக்க இவர் டிரஸ்டி பட்டம் கட்டிக்கொண்டதாகக் குலாவுவது வேடமே.

இவருடைய விளம்பரம் 4வது பிரகரணத்தில் "சத்திய ஞானசபைக்குக் கடந்த பிரஜோத்பத்தி வருஷம் தை மாதம் 18 தேதி திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்கப் பிள்ளை அவர்கள் தோன்றுந் துணையாகி இருந்து நேரில் குறிப்பித்தவண்ணம் என்னாலே ஞானக்கிரியா வதிரூபமாக ஸ்தூலலிங்க பிரதிஷ்டை என்னும் ஸ்தூபி" வைக்கப்பட்ட தென்றார்.

ஞானக்கிரியை என்பது என்னை? ஸ்தூலலிங்க பிரதிஷ்டை யென்பது என்னை? ஸ்தூபியென்பது என்னை? ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லை. சபை கட்டும்போது ஸ்தூபி வைக்கப்பட்டதை ஸ்தூல லிங்க பிரதிஷ்டை யென்றார். பொருளாலும் தேகத்தாலும் உழைத்துக்கொண்டிருந்த காரியஸ்தர் களைவிட்டு இவர் ஒருவகையாலும் அந்தச் சமுகத்திற்குக் குறியில்லாமலிருந்த இவருக்குச் சபை கட்டடத்திற்கு ஸ்தூபி வைக்கும்படி சொன்னது பெருமைதான். ஆனால் பிரஜோத்பத்தி வருஷம் சொன்னதை இவர் விஜய வருஷம் வெளியிட்ட விளம்பரத்தில் குறிப்பிட்ட காரணம் தெரிய வில்லை. தெரிவித்தது பெருமைக்கே.

இவருடைய விளம்பரம் 5வது பிரகரணத்தில் 650 ரூபா சந்தாபட்டி மூலமாகத் தொகைசேர்த்துச் சபைக்கு இருபுறத்திலும் நந்தவனங்கள் ஸ்தாபித்த தாகவும் பொன்னு ஞானாம்பாள் விசேஷ தன உதவியால் கெண்டாமணியொன்று கட்டினதாயும் ஆனந்த நடராஜப்பெருமான் முன் பொன்மை சுலவை நிறமுள்ள ப்ரசின்ன படங்கள் அமைத்ததாயும் பெரும் புகழைக் காட்டவந்தார். பொன்னு ஞானாம்பாள் விசேஷ சன உதவியால் கெண்டாமணியொன்று கட்டினதாகச் சொல்லவந்த இவர் கெண்டாமணிக்காகப் புதுப்பேட்டை கிராமவாசிகளால் ஐயனார் விக்கிரகமாகிய தாம்பிரத்தைக் கொடுத்தார்களே அவர்கள் பெயரை ஏன் குறிக்காமல் விட்டார்? மேற்படி சொன்ன நந்தவனங்களில் புஷ்பத்தையெடுத்து எந்தச் சாமிக்கி சாத்தப்போகிறார். கெண்டாமணி என்னத்திற்கு? ப்ரசின்ன படங்கள் என்னத்திற்கு? ஆன்ம லாபத்திற்குரிய சமரச சுத்த சன்மார்க்க சாதனம் இன்னதென்று தெரிந்து கொள்ளாத இவர் 650 ரூபா செலவுசெய்தது வீணே.

இவருடைய 6வது பிரகரணத்தில் இராமசாமி முதலியார் M.A., B.L.S. பத்தினி மரகதவல்லி அம்மாள் அவர்களால் மேற்படி சபையில் சுவாமிக்கு நித்தியம் உச்சிக்கால கட்டளை மஹாநிவேத்தியமும் நடத்திவைக்கப்பட்டு வருகிறதென்றார். சபையிலிருக்கும் எந்தச் சாமிக்கு இவர் உச்சிக்கால கட்டளை நடத்துகிறார்?

இவருடைய விளம்பரம் 8, 9வது பிரகரணத்தில் இறுக்கம் இரத்தின முதலியார் குமாரர் இ. கணபதி முதலியார், இ. சண்முக முதலியார் இவ்விருவர் களால் உயில் மூலமாய் ரூபா 1000 இந்தச் சபையில் ஆராதனை செய்யப்பட்ட சிவாசாரியார் அவர்களுக்கு ஆத்மார்த்த பூசை நைவேத்தியங்களுக்குச் சர்வசுதந்தரமாய் கொடுக்கப்பட்டதாயும், மேலும் கூடலுார் தாலுக்கா மேலப்புதுப்பேட்டை ஏரப்பிள்ளையால் நன்செய் புன்செய் சுமார் 8½ காணி நிலம் எனக்குத் தானஞ் செய்யப்பட்ட தென்றார்.

இவர் சபையில் கொண்டாடும் சாமியைவிட இவர்மேல்தான். இவருடைய ஆத்மார்த்த பூசை நைவேத்தியங்களுக்குக் கிடைத்த பொருள் சபையில் இவர் கொண்டாடும் சுவாமிக்குக் கிடைக்கவில்லை. சிறுந்தொகை யெல்லாம் சுவாமிக்கும், பெருந்தொகை யெல்லாம் இவருடைய ஆத்மலிங்கத்திற்கும் செய்து கொண்டார், இவருடைய புண்ணியமே புண்ணியம். இப்படிப்பட்ட பெருந்தொகையை அவர்கள் இவருடைய ஆத்மார்த்த பூசைக்கு எழுதிவைத்தது வியப்பே. மேலும் இவ்விருவர்களும் பாலியர்கள். இனிப் புத்திர சந்தானத்தைப் பெறத்தக்கவர்கள் நிர்ஹேதுவாக அவர்கள் இப்படிப்பட்ட உயில் செய்வதற்குக் காரணம் என்னை? எந்தக் காலத்தில் இந்த உயில் பிறந்ததாக இருக்கலாம். நேயர்களே நாம் ஒவ்வொருவரும் இதன் உண்மையை உற்று யோசிக்கலாம்.

இ. இரத்தின முதலியார் என்பவர் வள்ளலாரிடத்தில் மிகவும் அன்புடை யவர். இவரும் இவருடைய மனைவியாரும் சாலையிலிருந்தே காலமாய் விட்டார்கள். மேற்சொன்னவருடைய பிள்ளைகள் கணபதியும் சண்முகமும் பாலியர்களாக விருந்தபடியால் இந்த இரண்டு பிள்ளைகளும் பாட்டியாருடைய சவரட்சணையி லிருந்தார்கள். அந்தம்மாளும் காலமாய்விட்டபின் இவ்விருவரும் கையில் பொங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மூத்தவன் கணபதியென்ப வனுக்கு சுமார் 20 வயதிருக்கலாம். இந்தப் பிள்ளையோ அடுத்தடுத்துவரும் காக்கைவலியினால் புத்தி சுவாதீனமில்லாமல் வெறியனைப் போலிருந்தான். இது யாவருக்குந் தெரிந்த விஷயமே. இளையவன் சண்முகம் என்பவனுக்கு சுமார் 18 வயதிருக்கலாம். இந்த இளையவன் பொங்கி மூத்தவனையும் சவரட்சணை செய்துகொண்டுவந்த கஷ்டத்தினால், தான் கல்யாணஞ் செய்துகொள்ள எத்தனித்து சென்னப்பட்டணத்தி லிருந்த தன் சொந்த வீட்டை 1,500 ரூபாயிக்கி விர்ப்பனைசெய்து, இவருடைய விளம்பரம் 16வது பிரகரணத்திற் சொல்லியபடி 150 ரூபா பூசக்கட்டளைக்கு வைத்து, 350 ரூபா கல்யாணஞ்செலவுக்கு எடுத்துக்கொண்டு 1,000 ரூபா கல்லக்குறிச்சியில் தங்கள் போஷனைநிமித்தம் இந்தக் குருக்கள் மூலமாகவே நெல்லு வட்டிக்கிக் கொடுத்து, மேற்கண்ட சிறுவர் இருவர்பேரிலும் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டு ரிஜிஸ்டர் செய்துகொண்டார்கள். இந்தச் சண்முகம் என்கிற இளைய பிள்ளைக்கு, இந்தக் குருக்களே முன்னின்று பெண் பேசி, திருவொற்றி யூரில் கல்யாணஞ் செய்வதாய் ஏர்ப்பாடுசெய்து, கல்யாணத்திற்கு வைத்த 350 ரூபாயிக்கு இந்தக் குருக்களே சாமான்களெல்லாம் வாங்கி, திருவொற்றியூருக்கு அனுப்பினார். விவாகஞ் செய்துகொள்ளப்போகிற இந்தச் சிறுவன் உடனே பட்டணத்திலிருந்து பார்வதிபுரத்திற்கு வந்து சாலையிலுள்ளவர்களுக்குத் தாம்பூலம் வை வைப்பதற்கு சாமான்களை வாங்கிக்கொண்டு வந்தான். அன்றைய தினமே வாந்திபேதிகண்டு மரண அவஸ்தையினால் பிரகஞ்ஞை யில்லாமல் மறுதினமே இறந்தான். மூத்தவனோ எதைக் கொண்டும் போய் கொடுத்த போதிலும் கையெழுத்து போடத்தக்கவன்; அப்படிப்பட்ட புத்தி சுவாதீன மில்லாதவ னென்றும் யாவருக்கும் தெரிந்த விஷயமே. இந்தப் பிள்ளையும் மேற்படி இளையவன் இறந்த இரண்டாவது மாதமே மேற்படி வலியினால் துன்பப்பட்டு இறந்தான். அப்படியிருக்க எந்தக் காலத்தில் உயிலின்மூலமாய் இவருக்கு சர்வ சுதந்தரமாகக் கொடுத்திருக்கலாம்? ஒவ்வொருவரும் இந்த அதிசயமான சங்கதியைக் கவனியுங்கள். இதன்றிக் கல்யாணசெலவுக்கு வாங்கிய 350 ரூபாயும் எங்கே போயின? இதன் நியாயம் இராஜாங்கத்தார் முன்னிலையில் வெளிப்படும்போது இதன் உண்மையை தெரிந்துகொள்ளலாம்.

இதன்றி, மேற்கண்ட புதுப்பேட்டை ஏரப்பிள்ளை யென்பவர் தனக்கு தேக அசௌக்கியம் நேரிட்டபோது தேகநம்பிக்கை யில்லாமல் சாலைக்கு வந்து 8½ காணிநிலம் சபைக்குத் தானஞ்செய்வதாய் எத்தனித்தார். அத்தருணம் இவர் அதைத் தனக்குத் தானம் செய்தால் சபை கட்டளைகளைத் தடையில்லாமல் நடப்பிப்பதாய் அசௌக்கிய காலத்தில் அவரை மயங்கச்செய்து எழுதி வாங்கிக்கொண்டதாகத் தெரியவருகின்றது. இந்த ஏரப்பிள்ளை யென்பவர் நெடுங்காலமாகச் சாலை அபிமானியாக இருக்க யாதொரு சம்பந்தமுமில்லாமல் வழிப்போக்கராகிய இவருக்குத் தானங்கொடுக்க ஒரு அவசியமும் தோற்றப்பட வில்லை. மோசக் கருத்தால் மயக்குந் தன்மையால் மயங்கினார்.

இவருடைய விளம்பரம் 10வது பிரகரணத்தில் சொல்லிய கல்லக்குறிச்சி நாயனார் சுமார் 20 வருஷத்திற்கு முந்தியே சாலைக்கும் சபைக்கும் நிலம் தானஞ்செய்திருக்க இவர் முன்னிலையில் செய்ததாய் குறிப்புக்காட்ட வந்தது பொய்யே.

இவருடைய விளம்பரம் 13வது பிரகரணம் சாலை ஏற்பட்ட பிரபவ ௵ முதல் நாளது பரியந்தம் வருஷம் 28க்கு சாலை நிலங்கட்கு அபிமானிகளால் சந்தா வசூல் செய்து, 14 வருஷம் வரையில் தீர்வை செலுத்திக்கொண்டு வந்தார்கள். பதினான்கு வருஷத்திற்குமேல் முந்திய ஜமீன்தார்பேரில் பட்டா செய்து தீர்வை செலுத்திக்கொண்டு வரும்படி சில காரியஸ்தர்கள் கேட்டுக் கொண்டபடி அவர் செலுத்திக்கொண்டு வந்து, அவர் உயிலின்படியே இப்போது ஜமீன்தார் தீர்வை செலுத்த உடன்பாடாகவிருக்க, இவர் தன் முன்னிலையில் மேற்படி ஜமீன்தார் 1889 ௵ ஆகஷ்டு மாதத்தில் தாம்பூல தக்ஷணையோடு புத்திரி சகிதமிருந்து வாக்குத்தத்தஞ் செய்ததாய் இவர் சொல்லப் புகுந்தது பெருமையே.

இவருடைய விளம்பரம் 15வது பிரகரணத்தில் சுந்திரம்மாள் உயிலின்படி சுமார் 9 ௵ மாகத் தினஞ் சபையில் ஒரு தீபமும் புஷிய தினத்தில் சிறிது அன்ன விநியோகமும் நடந்து வருகிறதென்றார்.

எல்லா உயில்களின் தொகையைக் காட்டி இந்த உயிலின் தொகையை மறைத்தார். என்ன மோசக்கருத்தோ தெரியவில்லை. இந்தம்மாள் எங்கே அன்ன விதியோகஞ்செய்ய உயில் செய்தார்? இந்த 9 ௵ காலமாக இவர் எத்தவிடத்தில் அன்ன விநியோகஞ் செய்தார் ? இந்த உண்மையை ஒவ்வொரு வரும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இதன்றி இந்தம்மாள் உயிர்விடுங்கால், இவருடைய வீட்டின் திண்ணையின் பேரில், ஒரு சிறிய பெட்டியில் நகைகள், இரத்தினங்கள், ரொக்கங்கள் இதுமுதலியதும், பித்தளைசாமான்கள், பீரோ இதுமுதலியதும், சுமார் 1,000 ரூபா சொத்துவரையில் இருந்தனவே அதுகள் எங்கே அடங்கிற்று? அதையும் விசாரியுங்கள்.

இவருடைய விளம்பரம் 18வது பிரகரணத்தில் சுமார் 900ரூபா வரையில் சபையில் திருப்பணி செய்திருப்பதாயும் தற்காலந் தோன்றாத் துணையாயும் சொற்பனாதிகளில் தோன்றுந் துணையாயும் உள்ள திருவருட்பிரகாச வள்ளலார் அவர்களால் தெரிவித்துள்ள உபதேச கலைமாபான மந்திரங்களோடு வேதாகம விதிப்படி சத்திய சுபலமாய் சிவயாகக் கிரியைகள் ஆரம்பித்து கிரியா ஞானவதியாய்த் தாத்வீகப் பிரதிஷ்டை சுமார் 1,000 ரூபா வரையில் செலவுசெய்து கும்பாபிஷேகஞ் செய்யப்பட்டிருக்கு தென்றார்.

இப்போது உலகத்தில் வழங்கும் வேதாகம முதலியவைக ளெல்லாம் நம்பாதீர்கள் என்று சொன்ன வள்ளலார், வேதாகம விதிப்படி உபதேச கலைமரபான மந்திரங்களை 'அந்த வள்ளலார் குறிப்புக்கு விரோதமில்லாமல் நடக்கும்' இந்தப் பரம புருஷருடைய சொற்பனத்தில் வந்தா சாதித்தார்? சிவயாகக் கிரியை யென்பது என்னை? கிரியா ஞானவதியாய்த் தாத்வீகப் பிரதிஷ்டை யென்பது என்னை? கும்பாபிஷேகம் என்னத்திற்குச் செய்தது? இதுகளெல்லாம் சமரச சுத்த சன்மார்க்கத்திற்குரிய ஞானக்கிரியா மரபோ? இதுகளை யெங்கே கற்றனரோ? இவர் சில வருஷங்களுக்கு முன் ஆண்டவர் சொற்பனத்தில் வந்து சொன்னதாகச் சில கட்டுக்கதைகளை யெழுதி, இரண்டொரு சாலை அபிமானிகளுக்குத் தெரிவித்ததை இதற்குப் பின்னிட்டுப் பிரசித்தஞ் செய்யப்போகிற வடலூர் சரித்திரத்தில் பார்க்கலாம். அப்போது இவருடைய சொற்பனப் புளுகுகள் வெட்டவெளியாகும்.

இவர் விஜய ௵ சபையில் கும்பாபிஷேகஞ் செய்யப்போகிறதாக, வேண்டிய பொருளைப் பீராய்ந்து, பிராமணக் கும்பல்களைச் சேர்த்துக்கொண்டு, சபைக்குள் தென்னங்கீத்துகளைக் கட்டி, ஓமக்குண்டத்தைப் போட்டு, அனேக குடுவைகளை வைத்து, ஒரு கலசத்தை நாட்டி, இரவும்பகலும் ஓமத்தை வளத்தி, குடங்குடமாக நெய்யை ஊத்தி, ஒரு கல்லை வைத்து பத்மலிங்க மென்று அபிஷேகஞ் செய்து பின்பு அதை யெடுத்துக்கொண்டு அந்தந்த தேவாலயங்களுக்கு ஓடி மறுபடியும் அதைக் கொண்டுவந்து சபைக்குள் வைத்துப் பிரதிதினமும் இரகசியமாக உள்ளே அபிஷேகஞ் செய்துகொண்டு வருகிறார். வெளியாருக்கு ஒன்றைக் காட்டி ஒன்றை முடித்தார். இப்படிப்பட்ட சடங்குகள் வள்ளலார் எப்போதாவது இவருக்கு நடத்திக் காட்டிய துண்டோ? இவர் சில காலம் சுத்த சன்மார்க்கத்தை விளக்க வந்த வள்ளலிடத்தில் பழகியும், ஆத்மலிங்கம் இன்னதென்று ஒன்றுந் தெரிந்துகொள்ளாமல், கல்லைக்கட்டிக் கொண்டு 1000 ரூபாயை வீணாகச் செலவு செய்ததைவிட, வள்ளலார் சொன்ன சன்மார்க்கத்திற்குரிய ஜீவகாருண் யத்தை நாடி, ஆத்ம லிங்கங்களுக்கு அன்ன விநியோகஞ் செய்திருப்பாரே யானால் பொருள் கொடுத்தவர்களும் விசேஷ புண்ணியத்தை யடைந்திருப்பார்கள்.

இவருடைய 19வது பிரகரணத்தில் "தேவஸ்தான தருமஸ்தானங்களிலும் சத்தியஞான குருதேசிகன் திருமாளிகை உள்ள சித்திஸ்தானத்திலும் இன்னும் பற்பல செய்காரிய திருப்பணிகளிருப்பதாகக் குறித்துச் சிற்சபா ரகசியாங்கித பளிங்குத் திரையில் ஸ்வர்ண வில்வமாலை சாத்துவித்தலென்றார்." ஸ்வர்ண வில்வமாலை சாத்துவதற்கு வள்ளலார் இதையும் இவருக்குச் சொற்பனத்தில் வந்து சாதித்தாரோ. இது சமரச சுத்த சன்மார்க்கச் சின்னமோ?

மேலும், வள்ளலார் அநுமதிப்படி ச. ஆறுமுக முதலியாரால் ஏர்ப்படுத்தி யுள்ள பிளான் பிரகாரம் சத்திய தரும சிம்மாசனத்தை சந்தனமரத்தாலும் யானைத்தந்தத்தாலும் செய்து தங்கமுலாம் கலந்து பூர்த்திசெய்வித்து ஆராதனைக்கு அமைத்தல் வேண்டுமென்றார்.

சத்திய தருமசிம்மாசனம் இருக்குமிடத்தில் சூத்திரர்கள் தொழுகிறபடியால், அந்தவிடத்தில் தாங்கள் தொழுகிறதில்லை யென்று, அதன்பேரில் குற்றம் கற்பித்து, அதைவிட்டு பிராமணர்கள் தொழுதற்கென்றே ஒரு குட்டி சாலையை யுண்டாக்கி 10 வருஷ காலமாக அதைத் தொழுதுகொண்டுவருகிற இவர் அந்தச் சிம்மாசனத்தை கண்ணாற்கண்டு 10 வருஷமாகின்றதே அப்படி வேறுபட்ட இவருக்கு மறுபடியும் மேற்படி தரும சிம்மாசனத்தில் பேரில் கருணைவந்தது என்னை? வள்ளலார் இவருக்கு சொற்பனத்தில்வந்து சொல்லி இருக்கலாம். ஆறுமுக முதலியார் பிளான்படி நடத்தவேண்டியதாக இருந்தால் அக்காலத்தில்தானே அனேக காரியங்கள் நடந்திருக்கும். சபை கட்டடம் முடிந்தவுடன், அந்தப் பிளான்படி சில வேலைகளைச் செய்ய ஆறுமுக முதலியார் பிரயத்தினப்பட்டபோது, இனி நீங்கள் எந்த வேலையிலும் பிரவேசிக்காதீர்கள், செத்தநாய்களைப் போலிருங்கள், ஆண்டவர் வருங்காலத்தில் இந்த மார்க்கத்திற்கு வேண்டிய அங்கங்களெல்லாம், இராஜாங்கத்தார் முன்னிலையில் முடியுமென்றார்கள். அப்படியிருக்க இப்படிப்பட்ட காரியத்தில் இவர் நுழைய எண்ணங்கொண்டது பொருள் சம்பாதிக்கவோ? ஆனால் இது நல்லதருணந்தான்.

இதன்றி, தருமஸ்தானத்தில் பிராமண சைவ வேளாளர் முதலானவர் களுக்குச் சுயம்பாகம் செய்துகொள்ள கட்டடம் கட்டுவித்தலென்றார். இப்படிப் பட்ட வர்களுக்கும் பிரத்தியேகமாய் ஒரு கட்டடம் இருக்கவேண்டுமென்று வள்ளலாருக்கு அப்போதே தோற்றியிருக்குமேயானால் தருமச்சாலையைப் போல் வேறு ஒன்று கட்டியிருக்கலாம். அது சமரச சுத்த சன்மார்க்கிகள் வாசஞ்செய்யும் இடமென்று இவர் தெரிந்துகொள்ளவில்லை.

இதன்றி, சத்திய ஞானசபையில் காலை மாலை பூசை நைவேத்தியங்களுக்கு சாஸ்விதமான ஸ்தாவரசங்கம ஸ்திதி சம்பாதித்து வைக்கவேண்டுமென்றார்.

ஆனால் வள்ளலார் சித்தத் திருக்கோலத்துடன் வெளிப்பட்டுச் சுத்த சன்மார்க்கத்தை விளக்கஞ் செய்யப்போகிறதாகச் சொன்ன வாக்கியத்தில் இவருக்கு அவலமே. இல்லாவிட்டால் சாஸ்விதமான ஸ்திதி என்னத்திற்கு? வள்ளலாருடைய விவகார காலத்தில் சூழ்ந்திருந்த அனேக காரியஸ்தர்கள், தரும கைங்கரியங்கள் தடைபடாமல் நடந்துவரும் பொருட்டு பூஸ்திதிகளையும் ரொக்கங்களையும் வைப்பதாய் சொன்னபோது, அந்தப் பொறுப்பு உங்களுக்கு வேண்டாம், அது கடவுளுடைய பொறுப்பு, ஞானசித்தன் வெளிப்படுமுன் நீங்கள் பக்குவப்பட்டுப் பேரின்ப லாபத்தை அடையும்படியான முயற்சியை எடுத்துக் கொள்ளுங்க ளென்றார்கள். அதை இவர் கேட்டதில்லை.

இதன்றி, ஆராதிக்கும் சிவாசாரியர்களுக்குக் கிரகம் கட்டுவித்தலோடு சாதக உப சாதக ஆசாரியர்களும் பரிசாரகர் உபசாரகர் முதலிய கைங்கரிய பரர்களும் இந்த ஷேத்திரத்திலேயே வசிப்பதற்கு உறைவிடம் உபசீவன முதலியன ஏற்படுத்தல் என்றும் பல காரியங்கள் இருக்கின்றன வென்றார். மேற்படியாருக்கு உறைவிடம் உபசீவன முதலியவற்றிற்கு ஏற்படுத்த வள்ளலார் இவருக்கு சொற் பனத்தில் வந்து சாதித்தாரோ. இப்போது ஆராதிக்கும் சிவாசாரியருக்குத் தர்க்காலம் இருக்கும் கிரகம் போதாதோ? மெத்தைவீடு கட்டிக்கொள்ள வேண்டுமோ? சாதக உபசாதக ஆசாரியர்கள் என்னத்திற்கு? பரிசாரகர், உபசாரகர் முதலிய கைங்கரிய பரர்கள் என்னத்திற்கு? இவருக்குத் தொண்டு செய்யவோ? உற்றுகெட நூலையிடு' என்று சொன்ன வாக்கியம் இவருக்கே தகும். சிவாசாரியார் முதலிய பிராமணர்களுக்கு சாஸ்விதமாகவும் பாரம்பரியமாகவும் வாழ்வதற்கு உறைவிடம் உபசீவன முதலியதற்கும் ஏர்ப்பாடு செய்யத் துணிந்தார். வள்ளலார் திருக்கோலத்துடன் வெளிப்படுவதை மறந்தார். காசுபறிக்கும் வேடத்தைப் பூண்டார். இவர் வேடத்தை அந்தவிடத்திலும் பூட்ட ஆரம்பித்தார்.

இவருடைய விளம்பரத்தின் கடைசியில் ஒரு முக்கியமான கவனிப்பென்று முகவுரைக் கொடுத்து "இவ்வூரிலு மற்ற இடங்களிலு முள்ள சிலபல ஜனங்கள் திருச்சிராப்பள்ளி தஞ்சை முதலான பற்பல இடங்களிற் சென்று தாங்கள் தாங்களும் பற்பல கைங்கரியங்கள் இந்த ஷேத்திரத்தில் செய்வதாக அபிநயஞ் செய்து உரையாடி யாசித்து அபகரித்துக் கொள்வதாய்ப் பற்பல வழிகளால் கேழ்விபடுகிறதாயும், அப்படி அபகரித்துக் கொள்பவர்கள் பாவியாகாமல் கொடுப்போர் உத்தேசம் நிறைவேறாமல் திரவியம் வீணாவதை நிவர்த்திப்பதற்கும் தேவஸ்தான கைங்கரியங்களும் தருமஸ்தான புண்ணியத்திலும் சித்திஸ்தானத்தில் லட்சியமாயுள்ள அபிமானிகள் உபகரிக்குந் தொகையை தன்பேரால் மணிஆர்டர் செய்யவேண்டுமென்றார்."

பல ஜனங்கள் உரையாடி யாசித்து அபகரித்துக் கொள்வதாயும் தான் அப்படி பாவியாகாமல் புண்ணியதீர்த்தத்தில் நீராடும் இந்தப் புண்ணிய புருஷர், சாலைக்கு வந்த காலத்தில் “உடுக்கவோ வொரு கந்தைக்கு மேலில்லை" என்ற வாக்கியத்திற்கு ஒப்பாக இருந்த இவர், ஒருவிதமான விவகாரங்களு மில்லாமல் சபையை முன்னிலையாக வைத்துக்கொண்டு ஜாலங்காட்டி வயிறு வளப்பவருக்கு இப்போது சுமார் 20,000 ரூபா ஸ்திதிக்கி அதிகாரியா வதற்குக் காரணம் என்னை?

பற்பல கைங்கரியங்கள் செய்வதாய் அபிநயஞ்செய்து உரையாடி யாசித்து அபகரித்துக்கொள்வதாய், இவர் யாரை சுட்டிக்காட்ட வந்தனரோ, அந்த தர்மலிங்க பிள்ளை யென்பவர், 10 வருஷ காலமாக ஊரூராக பேயைப் போலலைந்து, வள்ளலார் கருத்திற் கொத்த தரும பரிபாலனத்தைத் தருமச்சாலை யில் தடையில்லாமல் நடத்திக்கொண்டுவந்தார். ஒவ்வொருவேளையில் தரும கைங்கரியம் தடைபடும்போது தன் சொந்த நகைகளை அடமானம் வைத்தும் விர்ப்பனைசெய்தும் தருமகாரியத்தைத் தடையில்லாமல் நடத்துவார். அவர்தம் கால முடிவுவரையில் ஓட்டாண்டியாகவே இருந்து சென்ற தை மாதம் இறந்தார். இது யாவருக்கும் தெரிந்த விஷயமே.

வள்ளலார் திருக்காப்பிட்டுக்கொண்ட காலமுதல் வள்ளலார் குறிப்பின்படி தருமச்சாலையில் தருமபரிபாலனத்தைச் சில காலம் சில சந்நியாசிகள் கூடி நடத்திக்கொண்டு வந்தார்கள். பின்பு மேற்படி தர்மலிங்க பிள்ளை யென்பவர் மேற்படி தருமபரிபாலனத்தை கைக்கொண்டு சென்ற ஜய௵ மார்கழி ௴ வரையில் நடத்திக்கொண்டு வந்தார். அப்படியிருக்க இவருடைய விளம்பரம் மூன்றாவது பிரிவில் தருமஸ்தான பரிபாலனத்துவம் என்னால் நிருவகித்து வரப்படுகிற தென்று சொல்லவந்தது, கொல்லன் வீதியில் ஊசி விர்ப்பனை செய்ய வந்தவன் போலாம். ஆனால் இவர் தருமஸ்தானத்தில் தருமபரிபாலனஞ் செய்வதாய் வருஷாவருஷம் யாசிக்கிறாரே அதை யென்ன செய்கிறார்? தைப்பூச காலங்களில் புளியேப்பமிடும் பிராமண கும்பல்களைச் சேர்த்துக் கொண்டு தான் சபையில் ஜாலங்காட்ட வேடந்தரித்து செய்யுந் திருவிழாகால பரியந்தம், அவர்களால் வேதகோஷ்டஞ் செய்வித்து, அவர்களுக்குப் பிரதிதினமும் சித்திரான்னங்களாலும் அப்பவர்க்கங்களாலும் தொப்பைகளை நிரப்பி, சவாஸ் குருக்கள் நல்லது செய்தார்கள் என்று சொல்லும்படி அவர்கள் தேக முழுதும் வாசனை திரவியங்களை அப்பி, இவருடைய திருவிழா முடிவுகாலத்தில் அவர்களுக்கு உடுகரை, தட்சணை முதலியதும் கொடுத்தனுப்புவார். இதன்றி அத் திருவிழாக்காலத்தில், இவருக்குப் பொருள்கொடுக்கும் பெரும்புட்டத் தாருக்கும் இவருக்கு ஏவல்செய்யும் ஆட்களுக்கும் வயிற்றை நிரப்புவார். அக்காலத்தில் யாராவது ஏழைகள் போய் பசியினால் பல்லையிளித்து சுத்துவார்களேயானால் அத்தருணம் இவருக்குப் பொருள்கொடுக்கும் பெரும்புட்டத்தார் யாராவது நேரிலிருந்தால், காருண்யம் ததும்பி வழிவது போல் இதோ சாப்பாடு போடுகிறேன் இருங்களென்று மெல்ல நழுவிவிடுவார். யாரும் இல்லாவிட்டால் தடியெடுத்து அடிக்கவந்து, அதோ தருமச்சாலையில் சாப்பாடு போடுகிறார்கள், அங்கே போங்களென்பார். இதுதான் இவர் வருஷாவருஷம் செய்யும் தருமபரிபாலனம்.

தருமஸ்தானத்தில் தருமபரிபாலனஞ் செய்வதாய் பிரதி வருஷமும் யாசிக்கிறோம். மேலும் பிரசித்தஞ்செய்கிற விளம்பரத்திலும் தருமஸ்தான பரிபாலனத்துவம் என்னால் நிருவகித்து வரப்படுவதாய் நீட்டாக வெழுதுகிறோம். இந்த உண்மையை விசாரிப்போர்க்கு கள்ளவேடமாக முடியுமே இதற்கு என்ன செய்யலாம்? தருமஸ்தானத்தையும் கைக்கொண்டால் ஊரையடித்து உலையில் போடலாம் என்று நெடுங்காலமாகக் கள்ளக் கருத்தை வைத்துக் கொண்டு , எலியைப் பிடிக்கும் பூனை பதுங்கியிருப்பது போலிருந்து, சென்ற ஜய வருஷம் மார்கழி மாதம் வரையில் தருமச்சாலையை நடத்திவந்த தருமலிங்க பிள்ளை யென்பவர், இறந்த இரண்டு மூன்று தினத்திற்குள் 'சந்துவிட்டது நான் வந்துவிட்டே' னென்று போலி டிரஸ்டி அதிகாரத்துடன் தனக்கான சிலரை தன்பின் அழைத்துக்கொண்டு சாலைக்குள் நுழைந்து, பிரதிதினமும் தர்ம கயிங்கரியங்கள் நடக்கும் சாமான்கள் வைத்திருந்த அறை பூட்டிட்டிருந்ததை சீல்செய்து சாலையின் பேரிலும் சாலையைச்சேர்ந்த தோட்டத்தின்பேரிலும் தனக்குப் போலி டிரஸ்டி அதிகாரம் இருப்பதாகக்காட்டி, சாலையையும் தோட்டத்தையும் இனி தன் அதிகாரத்தின்கீழ் நடத்தும்படியாகச் சில ஏர்ப்பாடு களைச் செய்துகொண்டு தன்னுடன்கூட அழைத்துக்கொண்டு போனவர்களைக் கொண்டு அந்த ஏர்ப்பாட்டில் கையெழுத்து வாங்கி வீணாக 20 ரூபா வரையில் செலவுசெய்து டிஸ்ரிகட்டு கெஜட்டில் பிரசித்தஞ்செய்து பத்திரிகையும் வெளியிட்டார். வள்ளலார் குறிப்பின்படி சமரச சுத்த சன்மார்க்க மரபுக்குரிய ஜீவகாருண்யமென்கிற பர உபகாரச் செய்கைகளை நாடி, மேல்கண்ட 20 ரூபாயை செலவு செய்திருப்பாரேயானால் பெரும்பயனை அடைந்திருப்பார். இவர் என்ன செய்வார்? பெருமைக்கு வேட்டையாட வந்தவர். இவர் செய்வதை தரும கயிங்கரியத்தை நடத்திக்கொண்டு வந்தவர்கள், அதை மேல்விசாரணை செய்து கொண்டிருந்த சில அபிமானிகளுக்குக் கடிதமூலமாகத் தெரிவிக்க அவர்கள் தைப்பூசத்துக்குமுன் வந்து, கூட்டங்கூடி, தைப்பூச சமாராதனைச் செய்ய வேண்டிய சாமான்களெல்லாம் சீலிட்ட அறையிலிருந்த படியால் சீல் செய்தவர்களை அழைப்பித்து சீலை உடைக்கும்படி கேட்டு உடைக்காததினால், சேர்ந்திருந்த கூட்டத்தார். சீலையுடைத்து, ஆண்டுகொண் டிருந்தவர்களுடைய சுவாதீனத்திலிருந்த சாவியைக்கொண்டு பூட்டைத் திறந்து, சமாராதனையை தடையில்லாமல் நடத்தினார்கள். இப்படிப்பட்ட புண்ணிய புருஷருடைய சரித்திரத்தை இன்னஞ் சொல்லப்புகின் விரியும். ஆதலால் இதைச் சுருக்கி வள்ளலார் கொள்கைக்கு மாறுபட்டு இப்படிப்பட்ட விரோதமான காரியங்கள் செய்ய, இவருக்குத் துணிவு வந்ததைக் கொஞ்சம் சொல்லுவோம்.

இந்த உலகம் உய்யும்பொருட்டு குருமுகுர்த்தமாக வெழுந்தருளிவந்த வள்ளலாரிடத்தில் இவர் வந்த முதற்காலத்தில், குலாசார தர்மங்களையெல்லாம் விட்டு, ஜாதி சமய பேதம் தனக்கில்லையென்று சமரச சன்மார்க்க நெறியில் நிற்கப் புகுந்த இவர் அந்த வள்ளல் திருக்காப்பிட்டுக்கொண்ட பின் மாறுபட்டது என்னை? அந்தத் திருவருள் வாக்கியத்தில் இவருக்கு அவலம் வந்து விட்டது. அதனால் பிராயச்சித்தம் செய்துகொண்டு பரமாசாரியர் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். இவருக்கு அவலம்வந்தால் அந்த இடத்திலிருந்து அப்புறப் படுவதை விட்டு அந்த இடத்திற்கு யாரும் திக்கில்லாததைப் போலவும், தான் கஷ்டப்பட்டு சம்பாரித்த சொந்த நிலங்களைப் போலவும், தான் பொருள் செலவு செய்து கட்டிவைத்த சபையைப் போலவும் பொருளாலும் தேகத்தாலும் உழைப்பு எடுத்துக்கொண்டவர்களும், அந்த மார்க்கத்திற்கு உரியவர்களும், அந்தத் திருவருள் குறிப்புக்கு எதிர்பார்த்துக்கொண்டிருக்க, ஒருவிதமான உபகாரமு மில்லாத இவர், நோவாமல் நோன்பு நூர்த்து போலி டிரஸ்டி பட்டத்தை தரித்துக்கொண்டு சபையையும் சபையைச் சேர்ந்த நிலங்களையும் சுதந்தரமாகப் பாராட்டி வெற்றிக்கொடியை நாட்டிக்கொண்டு, மரபுக்கு விரோதமான காரியங்களைச் செய்வது, என்னை? அதைச் சேர்ந்த அபிமானிகள் இவர் செய்யுங் காரியங்களை யாரும் கவனிக்காமையினால் கள்ள வேடத்தைத் தரித்துக் கொண்டாட்டம் போட ஆரம்பித்தார். ஆனால் இவருடைய உண்மை தான் என்னை? அந்த வள்ளலார் வாக்கில் சத்திய நம்பிக்கை யுடையவர்போல் வெளியாருக்கு நடித்துக்காட்டி, சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை ஆலயமாக்கி, அதற்குள் விக்கிரகத்தை வைத்து, இவருடைய விளம்பரத்தில் குறிப்பிட்டதுபோல் பளிங்குத் திரையில் ஸ்வர்ண வில்வமாலையைச் சாத்தி சிதம்பரத்தின் தீட்ஷதர்களைப் போல சுதந்தரமாக நின்று, தானும் தன் பின்வரும் குடும்பத்தாரும் அதனால் ஜீவனஞ் செய்துகொண்டு வரும்பொருட்டு, சபைக்குக் கட்டளைகளை வைக்க அவரவர்களைத் தூண்டுவதும், ரொக்கங் களையும் பூமிகளையும் எழுதி வாங்கி அந்தக் கட்டளைகள் தன் முன்னிலை யிலும் தன் பின்வருபவர்களுடைய முன்னிலையிலும் நடந்துவரும்பொருட்டு ரிஜிஸ்டர் செய்துகொள்ளுகிறதும், சாஸ்விதமான ஸ்தாவர ஜங்கம ஸ்திதி சம்பாதிக்கவும் பிராமணர்களுக்கு அக்கிரகாரம் உண்டாக்குவதற்கு ஆராதிக்கும் சிவாசாரியர்களுக்கும் சாதக உபசாதக ஆசாரியர்களும் பரிசாரகர் உபசாரகர் முதலிய கைங்கரியபரர்களும் வசிப்பதற்கு உறைவிடம், உபசீவன முதலியவை சம்பாதிக்க இவர் விளம்பரத்தில் பிரசித்தஞ் செய்திருப்பது சபையை ஆலயமாக்கி ஜீவனஞ் செய்யும் பொருட்டேயாம். இப்படிப்பட்ட கள்ளயெண்ணத்தைப் பற்றியே சாலையைச் சேர்ந்த நிலங்களின் மத்தியில் சுமார் 6,7 காணிவரையில் பட்டாவில் சேராமல் சாலை தோன்றிய காலம் வரையில் சாலை அநுபவத்தி லிருந்ததை இராஜாங்கத்தார் சர்வேசெய்யுங் காலத்தில் கண்டுபிடித்தார்கள். இவர் உண்மையான நம்பிக்கை யுடையவராகவிருந்தால் சபைக்கும் சாலைக்கும் மத்தியிலிருந்த நிலங்களைப் பொதுநன்மைக்கு சேர்ப்பதை விட்டு தன் மருமகன் பேரில் கள்ளத்தனமாகப் பட்டாசெய்துகொண்டு அந்த நிலங்களில் குளம்வெட்டி கோவில்கட்டி லிங்க ஸ்தாபனை செய்ய ஊரூராகப்போய் பாழடைந்திருக்கும் கோவில்களின் லிங்கத்தைப் பிடுங்கச் சொல்லுகிறார்.

இதன்றி, உலகத்தில் அனேக பொது சத்திரங்களுக்கும் போஷணை நிமித்தியம் எழுதிவைத்திருந்த நிலங்களையும் ரொக்கங்களையும் பாதுகாப்பதற்குக் காரியஸ்த்தர்களாக இருந்தவர்கள், தன் குடும்பத்தி லிருக்கின்றவர்க ளுடைய பெயரை, சாமி பெயராக அந்தச் சொத்துகளின்பேரில் பூட்டிவைத்திருந்து, மெல்லமெல்ல தங்கள் சுதந்தரத்தைப் பாராட்டிக் கொண்டுவந்து, சத்திர முதலானதும் விர்ப்பனைசெய்து வாயில்போட்டுக்கொண்டார்கள். அப்படியிருக்க, வள்ளலாரால் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை யென்று வழங்க, திருக்கரத்தால் எழுதிக்கொடுத்திருக்க, இவர் மேற்படி இடங்களை மானியஞ் செய்யப்புகுந்து, ஞானானந்தவல்லி ஆனந்த நடராஜர் வீற்றிருக்கும் சபையென்று தன் குமாரன் பெயரை நாட்டிக்கொண்டார். என்ன கள்ளக் கருத்தைக் கொண்டோ தெரியவில்லை!

இதன்றி, இரண்டொரு வருஷத்திற்குமுன் சில அபிமானிகள் சபைவிஷய மாய் இவரைக் கோர்ட்டில் வரவழைக்க சபை நெடுங்காலமாகத் தன் அனுபவத்திலிருப்பதால் அனுபவத்தின் லிமிடேஷன் தோஷம் வந்திருப்பதைப் பற்றி இந்த வாதிகள் அதை விஜாரிப்பதற்கு யாதொரு சுதந்தரமில்லை யென்று வாதாடினார். அப்போது இவருடைய கள்ளக்கருத்து சபையை அபகரித்துக்கொண்டு கூத்தாடலா மென்பதேயாம்.

இதன்றிச் சில வருஷங்களுக்குமுன் சாலையைச் சேர்ந்த சில பொதுநிலங்களை இவருக்கு உடந்தையாகவிருந்த வக்கீல் வெங்கடேச ஐயருடைய சொந்த நிலங்க ளென்றும், அது தனக்கு அவரால் தானம் கொடுக்கப்பட்டதென்றும் கோர்ட்டில் சாதித்து அசத்தியஞ் செய்தார்.

இதன்றி, வள்ளலாருடைய விவகாரகாலத்தில் சேர்ந்திருந்த காரியஸ்தர்கள் சுமார் 500 ரூபாவரையில் செலவுசெய்து ஒரு பெரிய குளம்வெட்ட ஆரம்பித் தார்கள். இதை வள்ளலார் கேழ்விப்பட்டு, "எள்ளுபோட்டால் எள்ளு கீழேவிழாது, அப்படிப்பட்ட கும்பல் சேருவதற்கு ஒரு காலம் வரப்போகின்றது, குளம் அவிடம் இருக்கப்படாது, வுடனே துத்துவிடும்படி உத்திரவுசெய்தார்கள்." அப்படியிருக்க இப்போது இவர் கள்ளத்தனமாக முன்னே கிணறுவெட்டுவதாய் ஆரம்பித்து அதை இப்போது சிவகங்ககையென்று பெரிய குளமாகச் செய்ய ஆரம்பித்தார்.

இதன்றி, வள்ளலார் காலத்தில் மேற்படி சாலைநிலங்களைச் சில காரியஸ்தர்கள் பயிரிட யெத்தனித்தார்கள். இந்த இடம் அதற்காக ஆண்டவரால் நிர்ணயிக்கப்பட்டதல்ல வென்று தடுத்துவிட்டார்கள். இப்போது இவர் போலி டிரஸ்டி அதிகாரத்தின் பேரில் நிலங்களை பயிர்செய்ய வாரத்திற்குவிட ஆரம்பித்த தல்லாமல் சாலைக்கும் சபைக்கும் மத்தியில் தன் மருமகன்பேரில் கள்ளத்தனமாகப் பட்டா செய்துகொண்ட நிலத்தையும், வேலி அடைத்து உழ ஆரம்பித்தார்.

இதன்றி, இவர் சில தருணங்களில் தனக்கு வேண்டிய சில அங்கங்களெல் லாம் கள்ளக் கருத்துடன் கடிதத்தில் எழுதிக்கொண்டு, அங்கங்கேபோய் தெரியாத பெண்பிள்ளைகளிடத்திலும் ஆண்பிள்ளைகளிடத்திலும் கையெழுத்து வாங்கி ரிகார்டு செய்துவைத்துக்கொள்ளுகிறார். அது என்ன கள்ளக் கருத்தைக் கொண்டோ தெரியவில்லை.

நேயர்களே! இதுவரையில் சொல்லிக்கொண்டுவந்த கதையினால் இவருடைய குருத் துரோக சிந்தனை ஒவ்வொன்றையும் உற்றுக் கவனியுங்கள். இவர் அந்தத் திருவருள் வாக்கியத்தில் உண்மையான நம்பிக்கை யுடையவர்போல் வள்ளலாரை லட்சயமாகக் கொண்டாடி வருபவர்களிடத்தில் விசேஷமாய் வள்ளலாரைப் புகழ்ந்து பேசுவார். தன்னை லட்சியமாகக் கொண்டாடி வருபவர்களிடத்தில் வள்ளலாரை இகழ்ந்து தன்னைப் புகழ்ந்து காட்டுவார். இராமலிங்கப் பிள்ளை அனேகரைக் கெடுத்துவிட்டா ரென்பார். சமயங்களையும் மதங்களையும் பூர்வபட்சம் செய்து சொன்ன விவகாரங்களெல்லாம் வள்ளலார் சொன்ன விவகாரங்களல்ல வென்பார். சில வருஷத்திற்கு முன் இவர் வீட்டில் களவுபோன நிமித்தம் அனேகர் முன்னி முன்னிலையில் வள்ளலாரை துர்ப்பாஷையினால் இவர் இகழ்ந்து வார்த்தையாடினது அளவேயில்லை. சிலரிடத்தில் வள்ளலாரைச் சூழ்ந்திருந்தவர்க ளெல்லாம் நிரட்சரக்குட்சிகள், யாரும் ஒன்றுந் தெரிந்துக் கொள்ளவில்லை, தான்மாத்திரம் அட்சரகுட்சியா யிருந்தபடியால் அனேக இரகசியங்கள் தெரிந்துகொண்டதாயும் ஞானப்பால் உண்டதாயும் சொல்லுவார். இப்படி ஒருவரைவிட்டு ஒருவருக்கு அவரவர்கள் நிற்கும் நிலைக்குத் தக்கபடி வேடங்களைப் பூண்டு பேசுவார். வள்ளலாரிடத்தில் இவர் எல்லாம் கேட்டுத் தெளிந்தவரென்றும், பிரதம சீஷரென்றும் ஞானப்பால் உண்டது உண்மையென்றும், இவருக்குத் தெரியாதது ஒன்றுமில்லையென்றும் தன்னைப் புகழ்ந்து காட்டி, தன் வேடத்திற்குத் தக்கபடி தாளம்போட, திருநெல்வேலி நாராயண ஐயங்கார் என்கிற ஒருவரை ஆளாக்கிவைத்துக் கொண்டு, வைணவத்தைவிட்டு சைவசமயத்தில் நுழைக்கச் செய்து, கல்வியில் சிறிதும் பயிர்ச்சியில்லாமல், கும்பாபிஷேக விதிகளைமாத்திரம் சிலதைக் கற்றரிந்த இவர், அவருக்குச் சாஸ்திரியென்று பட்டப் பெயரையும் தரித்தார். இப்பெயரை தரித்துக்கொண்ட இவர், வந்தபோது புலி பசுத்தோல் போர்த்தியது போல் வேடந்தரித்திருந்து, பின்பு இவருடைய உண்மையான சொரூபத்தைக் காட்டத் தொடங்கினார். இவரை குருக்கள் வசப்படுத்திய காலமுதல், சாலையில் இவரால் கலகம் மேலுமேலும் பொங்க ஆரம்பித்தது. சிவாநுபவச் செல்வரைப்போல் வள்ளலார் வாக்கியங்களுக் கெல்லாம் விபரீத மான அர்த்தங்களைச் செய்வதும் வாக்கியங்களை மாற்றவும் ஆரம்பித்தார். இந்தக் குருக்கள் சொல்வதுபோலவே இவருக்கும் ஆண்டவர் சொர்ப்பனத்தில் வந்து அனேக காட்சிகளைக் காட்டுவதாக இவர் பாடும் கவிகளில் பூட்டுவார். அது உண்மையாகவிருந்தால் அப்படிப்பட்ட பரமாசாரியரை விட்டு, திருவண்ணாமலைக்குப்போய், எமனுக்கு இரையாக இருக்கும் அனாசாரியரைக் கொண்டு, மரபுக்கு விரோதமாகச் சந்நியாச வேடத்தைத் தரித்து கையில் விருதைப் பிடித்துக்கொண்டது என்னையோ? விருதைப் பிடித்த இவர் செத்த நாயைப்போல் இருப்பதைவிட்டு சேஷ்டை செய்வது என்னை? இவர் இந்தத் தைப்பூசத்தில் சில அன்னிய தேசத்தர்கள் வள்ளலாரிருந்த திருச்சந்நிதியைத் தரிசிக்க நின்ற தருணத்தில் அவர்கள் மனம் நோகும்படி 'வினாசகாலே விபரீத புத்தி' க்கினமாய் மேற்படி சந்நிதியை பூட்டிவிட்டு வந்துவிட்டார். வீடுவந்து சேருவதர்க்கு முன்னமே வழியில்தானே வெறிகொண்டு சிலநாள் மலஜலம் இன்னதென்று தெரியாமல் உழன்றுகட்டி அடிக்கப்பட்டார். அத்தருணம் இந்தக் குருக்களின் கள்ள வேடங்களெல்லாம் பயிரங்கப்படுத்தினார். இவருக்கு ஆண்டவர் சொற்பனத்தில் தோன்றுவதாக இருந்தால் வெறிபிடித்து ஊரூராக அலைவது என்னை?

இதுவரையில் இதில் இந்தக் குருக்கள் விஷயமாகச் சொல்லிவந்த ஒவ்வொன்றையும் உற்றுக் கவனியுங்கள். அந்தத் திருவாக்கில் இவருக்கு அவலம் வந்தபடியால், சபையை ஆலயமாக்கி, அதைச் சேர்ந்த நிலங்களையெல்லாம் தன் சுவாதீனஞ் செய்துகொண்டு தானும் தன் குடும்பத்தாரும் ஜீவனஞ் செய்யலா மென்பதே இவருடைய முக்கியக் கருத்து. அதற்குத் தக்கபடியே தன்னை யாரும் கேழ்க்காதிருக்கவும் தனக்கு எல்லா சுதந்திரமும் இருப்பதுபோலவும் நடித்துக்காட்ட அதிகாரத்தைச் செலுத்தத்தக்க போலி டிரஸ்டி பட்டமும் கட்டிக்கொண்டார். இவருக்குப் பட்டம் கொடுத்த ஜமீன்தாருடைய முன்னோர்களெல்லாம் வள்ளலார் விவகார பரியந்தம் தருமச்சாலையில் அன்னதானஞ் செய்தது அளவேயில்லை. அப்படிப்பட்ட புண்ணிய கைங்கரியங்க ளெல்லாம் மறந்து இவர் மயக்கத்தில் விழுந்து தர்மகர்த்தத்துவம் இன்னவிதமாகத் தமக்கு வந்ததென்று யோசிக்காமலே இவருடைய வார்த்தையைக் கேட்டுப் போலி டிரஸ்டி வேடத்தை முடிசூட்டி இவர் இஷ்டப்படி கூத்தாடவிட்டார். அந்த ஜமீன்தாரரும் சமரச சுத்த சன்மார்க்க மரபு இன்னதென்று வள்ளலார் பாசுரங்களாலும் விவகாரங்களாலும் சொல்லியிருப்பதைத் தெரிந்துகொண்டவரல்லர்.

இந்த ஜமீன்தார்பேரில் பட்டா யிருந்ததுப்பற்றியே சாலை சபை முதலானவிடங்களுக்கு மத்தியிலிருந்த நல்ல நிலங்களை யெல்லாம் தன் மருமகன்பேரில் பட்டா செய்துகொண்டு அங்கங்கே வேலிகளை யடைத்து அந்த நிலத்தில் தன் இஷ்டப்படி செய்ய இடங்கொடுத்தது.

நேயர்களே! சமரச சுத்த சன்மார்க்கத்தை விளக்கிக் காட்டவந்த திருவருட் பிரகாச வள்ளலார், தாம் திருக்காப்பிட்டுக்கொள்ளும் வரையில் தம்மைச் சூழ்ந்திருந்தவர்கள் ஒவ்வொருவரும் சமரச சுத்த சன்மார்க்கச் சாதனம் இன்னதென்று தெரிந்து நடக்கும்பொருட்டு அவர்கள் சொன்ன விவகாரத்தைச் சுருக்கமாக, இதனடியில் வருமாறு காண்க:

(சமரச சுத்த சன்மார்க்கம் யென்றதற்குப் பொருள் விளக்கிக் காட்டிருப்பதை இது முன்னமே குறித்திருக்கிறோம்.) "இதுவரையில் கர்ம சித்தருடைய காலம். அதனால் சமயங்களும் மதங்களும் பரவியிருந்தன. இப்போது வரப்போகிறது ஞான சித்தருடைய காலம். இனி, ஜாதி சமய முதலான ஆசாரங்க ளெல்லாம் போய் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம் ஒன்றே விளங்கும். சமய மதங்களில் சொல்லுகிற கருத்தர்கள் மூர்த்திகள் ஈசுரன் பிரமம் சிவம் முதலிய தத்துவங்கள் காலப்பிரமாண பரியந்தம் இருப்பதே யொழிய அதற்குமே லிராது. சமய மதங்களில் சொல்லுகிற கர்த்தர்களுடைய சித்திகள் சர்வசித்திகளுடைய கடவுளின் சித்தியின் லேசங்கள் அந்தச் சர்வசித்தியை யுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள். கோடிகோடி பங்கு தாழ்ந்த தரத்தி லிருக்கிறார்கள். இப்போதிருக்கும் வேதாகம புராணங்களிலும் சமயமதங்களிலும் லட்சியம் வையாதீர்கள். வைத்தால் சமரச சுத்த சன்மார்க்கத்தில் உங்களுக்கு லட்சியம் வராது. வராவிட்டால் நீங்கள் அடையப்போகிறது ஒன்றுமில்லை. ஆதலால் அதுகளெல்லாம் பற்றறவிட்டு சர்வசித்தியை யுடைய கடவுள் ஒருவருண்டென்றும், அவர் ஒருவரே யென்றும், அவரை உண்மை யன்பால் வழிபாடு செய்யவேண்டும். அப்படிப்பட்ட சமரச சுத்த சன்மார்க்கத்திற்குரிய கடவுளை வழிபாடு செய்வதற்கு, சாதனம் இருவகை - பரவுபகாரம், சத்விசாரம். பரஉபகாரமென்பது தேகத்தாலும் வாக்காலும் திரவியத்தாலும் உபகாரஞ்செய்வது. சத்விசாரமென்பது நேரிட்ட பட்ஷத்தில் ஆன்மநேய சம்பந்தமான தயாவிசாரத்தோடு இருப்பது. கடவுளது புகழை விசாரித்தல், ஆன்மாவின் வுண்மையை விசாரித்தல், தன் கிருபையைக் கடவுளிடத்தில் விண்ணப்பித்தல். இந்த மார்க்கத்தால்தான் சுத்த திரேகம் பெறவேண்டும். ஜீவர்களெல்லாம் ஒரு தன்மையாகிய இயற்கையுண்மை ஏகதேசமாய்ச் சர்வசக்தியுடைய கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டபடியால் ஒருரிமையுள்ள சகோதரர்க ளென்றெண்ணி, அவர்கள் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம்,கொலை இவைகளால் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதாயினும் கேட்டபோதாயினும் இவ்வாறு உண்டாகுமென்று அறிந்தபோதாயினும் உபகாரஞ்செய்வதே ஜீவகாருண்யம். இப்படிப்பட்ட ஜீவகாருண்யம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்றுவிளங்கும். அதனால் உபகார சத்தி விளக்கும். உபகார சத்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும். ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கமென்றும், ஜீவகாருண்யத்தினால் வரும் இன்பமே கடவுள் இன்பமென்றும் சொன்னார்கள். ஜீவகாருண்யம் உண்டானால் அன்புண்டாகும், அன்புண்டானால் அருளுண் டாகும், அருளுண்டானால் சிவாநுபவம் உண்டாகும். ஜீவகாருண்ய மென்கிற திறவுகோலைக் கொண்டு அன்பின் வழிசென்று அருளென்னும் பூட்டைத் திறந்து, நமது தலைவர் வாசஞ்செய்யும் கோட்டையில் நுழையவேண்டும். மேலும், ஜீவகாருண்யத்தில் பர ஜீவகாருண்ய மென்றும் அபர ஜீவகாருண்ய மென்றும் இருவகை. பசியையும் கொலையையும் தவிர்ப்பது பர ஜீவகாருண்யம். மற்றது அபர ஜீவகாருண்யம். ஜீவர்களுக்கு பசி அதிகரித்த காலத்தில் ஜீவவறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றன. அவை மயங்கவே யறிவுக்கறிவாகிய கடவுள்விளக்கம் மறைபடுகின்றது. அது மறையவே புருடதத்துவஞ் சோர்ந்து விடுகின்றது. அது சோரவே பிரகிருதிதத்துவ மழுங்குகின்றது. அது மழுங்கவே குணங்களெல்லாம் பேதப்படுகின்றன, மனம் தடுமாறிச் சிதறுகின்றது, புத்திகெடு கின்றது, சித்தங் கலங்குகின்றது, அகங்கார மழிகின்றது, பிராணன் சுழல்கின்றது. பூதங்களெல்லாம் புழுங்குகின்றன, வாத பித்த சிலேட்டுமங்கள் நிலைமாறுகின்றன. கண் பஞ்சடைந்து குழிந்துபோகின்றது, காது கும்மென்று செவிடுபடுகின்றது. நாவுலர்ந்து வறளுகின்றது, நாசி குழைந்து அழல்கின்றன. தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது, கை கால் சோர்ந்து துவளுகின்றன, வாக்குத்தொனி மாறிக் குளறுகின்றது, பற்கள் தளறுகின்றன, மலஜலவழி வெதும்புகின்றது. மேனி கருகுகின்றது, ரோமம் வெறிக்கின்றது, நரம்புகள் குழைத்து நைகின்றன. நாடிகள் கட்டுவிட்டு குழைகின்றன, எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன, இருதயம் வேகின்றது, மூளை சுருங்குகின்றது. சுக்கிலம் வெதும்பி வற்றுக்கின்றது, ஈரல் கரைகின்றது, இரத்தமுஞ் ஜலமுஞ் சுவறுகின்றது. மாம்சங் குழைந்து தன்மை கெடுகின்றது, வயிறு பகீரென்றெரிகிறது, தாபசோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன, உயிரிழந்து விடுவதற்கு மிகவும் சமீபித்த வடையாளங்களும் அனுபவங்களுந் தோன்றுகின்றன. இவ்வாறு ஜீவர்களுக்கெல்லாம் பொதுவாகவே யிருக்கின்றன. இவ்வளவு அவஸ்தைகளும் ஆகாரங் கிடைத்தபோது உண்டு பசி நீங்குகின்றன. அப்போது தத்துவங்களெல்லாம் தழைத் துள்ளங் குளிர்ந் தறிவு விளங்கி, அகத்தினு முகத்திலுஞ் சீவ களையுங் கடவுள் களையுந் துளும்பி ஒப்பில்லாத திருப்தி யின்ப முண்டாகின்றது. இப்படிப்பட்டயு யின்பத்தை உண்டுபண்ணுகின்ற புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை யிணையென்று சொல்லலாம். இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று சொல்லலாம். எல்லா தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுள் அம்ஸமென்றே சத்தியமாக வறியவேண்டும்."

இப்படிப்பட்ட கடவுள் அம்ஸத்தை யுண்டாக்கும் புண்ணிய கையிங் கரியத்தைச் செய்துகாட்டும்பொருட்டே தருமச்சாலை ஒன்று கட்டி தாங்கள் திருக்காப்பிட்டுக்கொள்ளுகிற பரியந்தம் அதில் அன்னதானஞ் செய்தது அளவே இல்லை. தாங்கள் திருக்காப்பிட்டுக்கொள்ளுந் தருணத்திலும் தருமச் சாலையை சும்மா போடாதீர்கள் புகைந்துக்கொண்டே இருக்க வேண்டுமென் றார்கள் என்றால், அன்னதானஞ் செய்துகொண்டிருங்க ளென்பதேயாம். இரண்டாவது சத்விசார மென்பது சாந்த மனத்தையும் உண்ணோக்கத்தையும் உடைய சாதுக்களுடன் அண்ட பிண்ட விசாரஞ்செய்தல். அது நேராத பட்சத்தில் ஆன்மநேய சம்பந்தமான தயா விசாரத்தோடிருப்பது, கடவுள் புகழை விசாரித்தல், ஆன்மாவின் உண்மையை விசாரித்தல், தன் சிறுமையைக் கடவுளிடத்தில் விண்ணப்பித்தல். விசாரமென்பது சரியை முதலான நான்கில் நாலாவது ஞாலத்தில், சரியை, கிரியை, யோகம், ஞான மென்கிற நான்கு படியில் மூன்றாவது படியாகிய ஞாலத்தில் யோகஞ் செய்கிறபடியாகும். விசாரஞ் செய்கிற உஷ்ணத்தால் ஜலத்திலிருக்கிற பாசியை நீக்குவதுபோல் ஆன்மாவை தெரிய ஒட்டாமல் மறைத்துக்கொண்டிருக்கும் பச்சைத்திரையை நீக்கிக்கொள்ளலாம். அது நீங்கின உடனே அதற்குமேலிருக்கும் மற்ற எட்டுத் திரையும் அதிக விரைவில் நீங்கிப்போய்விடும். விசாரத்தைவிட ஆண்டவரை மனநெகிழ்ச்சியோடு தோத்திரஞ் செய்வதினாலும் சதா அவன் திருவடியைச் சிந்தித்துக்கொண் டிருப்பதினாலும் கோடிகோடி பங்கு அதிகமாக நல்ல உஷ்ணத்தை உண்டுபண்ணிக் கொள்ளலா மென்றார்கள்.

இதன்றிச் சன்மார்க்கத்திற்குரிய சாதனங்கள் இந்திரியஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவஒழுக்கம், ஆன்மஒழுக்கம்.

இந்திரிய ஒழுக்கமாவது

கொடியவார்த்தை முதலியவை செவிபுகாமல் நிற்றல், நாதமுதலிய தோத்திரங்களை உற்றுக்கேட்டல், மற்றவை கேளாதிருத்தல், அசுத்தங்களை தீண்டாதிருத்தல், கொடூரமாகப் பாராதிருத்தல், ருசியின்மீது விருப்பமில்லா திருத்தல், சுகந்தம் விரும்பாதிருத்தல், இனிய வார்த்தையாடுதல், பொய்சொல்லா திருத்தல், ஜீவஇம்சை நேரிடுங்கால் எவ்வித தந்திரத்திலாவது தடைசெய்தல், பெரியவாளிடத்தில் செல்லுதல், உயிர்க்கு உபகரிக்கு நிமித்தம் சஞ்சரித்தல், உயிர்க்கு உபகரிக்கு நிமித்தம் கையால் உபசுரித்தல், மலஜலாதிகளை அளவுமீறா மலும் கிரமம்குறையாமலும் அளவைப்போல் தந்திர ஒளஷதிகளாலும் ஆகாரத்தாலும் பவுதிக , பக்குவத்தாலும் செய்வித்தல்.

கரண ஒழுக்கமாவது,

சிற்சபையின்கண் மனத்தைச் செலுத்துவது தவிர மற்ற எந்தவகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த விடத்திலிருத்துவது. பிறர்க்குற்றம் விசாரியாதிருத்தல், தன்னை மதியாதிருத்தல், செயற்கைக் குணங்களாலுண்டாகிய கெடுதியை நீக்கி இயற்கைக் குணமாகிய சத்துவ மயமாக இருத்தல், தனது சத்துருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல், அக்கிரமம், அதிக்கிரம புணர்ச்சி செய்யாதிருத்தல்.

ஜீவ ஒழுக்கமாவது,

எல்லா மனிதர்களிடத்தும் ஜாதி சமயம் மதம் ஆசிரமம் கோத்திரம் சூத்திரம் குலாசாரம் தேசமார்க்கம் உயர்வு தாழ்வு ஆகிய பேதங்களற்று தானாக நிற்றல்.

ஆன்ம ஒழுக்கமாவது,

எண்பத்து நான்கு லக்ஷ பேத யோனி யிடத்துள்ள ஆன்மாக்க ளிடத்தில் இரங்கி ஆன்மாவே சபையாகவும் அதிலுள் பதியாகி பூரணமாக நிற்றல். சுத்த சன்மார்க்கத்திற்குரிய சாதனங்கள் அந்தத் திருவருள் வாக்கிலிருந்து ததும்பி வழிந்திருக்கும் மந்திரங்கள் இன்னம் அனேகம் அவர்கள் சொன்ன விவகார சுருக்கத்திலும் ஆறாவது திருமுறையிலும் பார்க்கலாம். இப்படிப்பட்ட சாதனத்தைச் செய்துகொண்டு அந்தத் திருவரவுக்கு எதிர்பார்த்துக் கொண்டிருப் பதை விட்டு இவர் அந்தத் திருவருள் வாக்கிற்கு விரோதமாக ஞானசபையை தேவஸ்தானமாக்கி விக்கிரகங்களை வைத்து விளையாட ஆரம்பித்தார். ஆனால் அந்தச் சபையானது என்னத்திற்காகக் கட்டப்பட்டது? வள்ளலாருடைய ஆன்மப் பிரகாசமாகிய ஞானசபையைப்போல் வெளிமுகமாக விளக்கிக்காட்டி ஆண்டவர் வருகைக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்? ஒரு சிறிய குடிசையாவது போடுங்களென்று சொன்னார்கள்.அங்கிருந்த பொருளாளிகள் விசேஷப் பொருள் செலவு செய்து வள்ளலார் குறிப்பின்படி ஒரு அலங்காரமான கட்டடத்தைக் கட்டினார்கள். இந்தக் கட்டடத்தை வள்ளலார் கண்ணால் பார்த்ததேயில்லை. சுத்த சன்மார்க்க சாதனை யுடையவர்களுக்கு முதல் ஆன்ம அனுபவம் அதை மறைத்திருப்பது அசுத்த மாயா திரைகள் ஏழு. இந்தத் திரைகளை விசாரமென்கிற உஷ்ண ஞானத்தால் நீக்கிக்கொண்டு அறிவுருவாகிய ஆன்மாவைக் கண்டு அறிவுருவாகிய கடவுளை அடைய வேண்டிய திருப்பதால் அந்தக் குறிப்பையுங் காட்டுந் நிமித்தம் சபையில் திரையை போடச் சொன்னதேயல்லது எல்லாம் வல்ல சித்தன் வந்து அதில் புகுந்துகொண்டு எல்லா அற்புத சித்திகளும் நடத்த அல்ல.

வள்ளலாருடைய விவகாரத்தில் ஞானசபை யென்பது ஆன்மப்பிரகாசம். அந்தப் பிரகாசத்திற் குள்ளிருக்கும் பிரகாசந்தான் கடவுள். அந்த வுள்ளொளியின் அசைவு நடனம். இதைத்தான் சிற்சபையென்றும் ஞானசபையென்றும் நடனமென்றும் சொல்லுகிற தென்றார்கள்.

அறிவாரறியும் வண்ணங்க ளெல்லாமாகி விளங்குகின்ற ஒப்பற்ற கடவுள் தாமே காரியப்படாது, பக்குவப்பட்ட ஆன்மாக்களின் முன்னிலையில் காரியப்படவேண்டும். அற்புத சித்திகளெல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் என்று அற்புத பத்திரிகையில் குறிப்பிட்டது வள்ளலாருடைய ஆன்மப்பிரகாசமாகிய ஞானசபையி லல்லது இந்தக் குருக்கள் ஜாலங்காட்டும் சபையிலல்ல. அப்படி ஆண்டவர் காரியப்படுமிடம் அருளுருவாதலால் அது எங்கும் உள்ளது. எங்கும் உள்ள பொருள் இப்போது இந்தக் குருக்கள் ஜாலங்காட்ட முன்னிலையாக வைத்துக்கொண்டிருக்கும் ஞானசபையில் புகுந்துகொண்டு எல்லா அற்புத சித்திகளும் நடத்தவேண்டிய தில்லை. வள்ளலாருடைய விவகாரகாலத்தில் அருகோலமாக வெளிப்படும். சுத்ததேகத்தை ஊனக்கண்ணால் பார்க்கமுடியாது. ஞானக்கண் வேண்டும். அந்த அருளுருவானது ஆன்மாக்களின் பக்குவத்துக்குத் தக்கபடி, அங்கங்கே நின்று அநுக்கிரகஞ் செய்யும். இப்படித் தான் தில்லைமூவாயிரரென்பது, 2999 பேர் பக்குவப்பட்ட ஆன்மாக்கள். அதில் சுத்ததேகம் பெற்ற கர்மசித்தர் ஒருவர், அந்தச் சிதம்பரம் எல்லையிலிருந்து 2999 பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கும் அங்கங்கிருந்து அவரவர்கள் நிலைக்குத் தக்கபடி அநுக்கிரகஞ் செய்துகொண்டு அந்தக் கூட்டத்தை நடத்திக்கொண்டுவந்தார். அந்தக் கலியுகம் ஆரம்பத்தில் அந்தச் சித்தர் அந்தக் கூட்டத்தோடு மறைந்தார். அந்தச் சித்தருடைய வுருவுதான் இப்போது குருமுகுர்த்தமாகச் சிதம்பர சபையில் வைத்திருக்கிரதென்றும் இப்போது சுத்த சன்மார்க்கத்தை விளக்கஞ் செய்ய வெளிப்படப்போகிறவர் ஞானசித்த ரென்றும் சொன்னார்கள்.

ஆனால் ஆண்டவர் வருங்காலத்தில் ஞானசபையானது தானே திறந்து கொள்ளும் என்று சொன்னது என்னை? தமது ஆன்மப்பிரகாசமாகிய ஞானசபையானது தானே திறந்துகொள்ளுமென்று சொன்னது உண்மையே.

ஆனால் அப்போது அந்த ஞானசபையானது அற்புதமான கட்டடமாகத் தோற்றுமென்று சொன்னது என்னை? சுத்ததேகம் அருளுருவானதால் அந்தத் தேகம் அற்புதமான கட்டடமாகத் தோற்றுமென்பது உண்மையே.

ஆனால் அப்போது எல்லா அற்புத சித்திகளும் நடக்கும் என்பது என்னை? காரியப்படும் அந்தச் சுத்த தேகத்தால் எல்லா அற்புத சித்திகளும் நடக்குமென்பது உண்மையே.

மேற்சொன்னபடி சுத்த சன்மார்க்கத்தின் மரபை விளக்கிக்காட்டவந்த ஞானசபையே யல்லது எல்லாம் வல்ல சித்தன் அதில் வந்து புகுந்து கொண்டு அற்புத சித்திகள் நடத்தக்கட்டிய சபையும் அல்ல, அல்லது இவர் தேவஸ்தானமாக்கி வயிறு பிழைக்கக் கட்டிவைத்த சபையும் அல்ல. சபையைத் திறந்த சில காரியஸ்தர்கள் இவரை சபைக்கி தீவாராதனைச் செய்ய நேமித் தார்களே யல்லது 'ஊறுகெட நூலையிடு' என்று சொன்ன பெரியோர்களுடைய வாக்கியத்தைப் பரிபாலனஞ் செய்ய நேமிக்கவில்லை. இவருடைய மரணம் பிணி மூப்பு இந்த மூன்று அவஸ்தையும் தவிர்க்கும்படியான சற்குருவு கிடைத்தும் அந்தக் குறிப்பின்படி இவர் நிற்கப் பயன்படவில்லை. என்ன செய்யலாம்? இவருடைய கர்மத்தின் வலிவே வலிவு.

வள்ளலார் திருக்காப்பிட்டுக்கொள்ளுந் தருணத்தில் இவடம் அனேகர் அனேக ஆரவாரஞ் செய்வார்கள். சொன்னால் கேளார்கள். இரண்டரை வருடமாக நான் சொல்லிக்கொண்டு வந்தேன். இதுவரையில் இருந்தது போலிராதீர்கள். இது கடைசி வார்தை. இதுமுதல் கொஞ்சதினம் சாலைக்கிப் போகிறவரையில் ஜாக்கிருதையாக மேல்சொன்ன பிரகாரம் விசாரஞ் செய்துகொண்டிருங்கள். அவசியம் தயவு இருக்கவேண்டியது. அந்தத் தயவுக்கு உரிமை முக்கியமாக இருக்கவேண்டும். இவ்வா றிருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையு பெற்றுக்கொள்ளலாம் என்று சொன்ன வாக்கியத்தை உற்றுக்கவனியுங்கள். சிவாச்சாரியாரென்று போலி டிரஸ்டி பட்டத்தைப் பூண்டு அந்தச் சபை முதலான இடங்களுக்குத் தானே சுதந்தர கர்த்தாவைப்போல் நினைத்துத் தான்தோன்றித் தம்பிரானாய்த் திரியும் இந்தக் குருக்கள் வயிறு வளர்ப்பதற்குப் பராக்கு காட்டவந்த மருள்வலையில் அகப்பட்டு வீண்பொருள் செலவுசெய்து மயங்காதீர்கள். ஒரு தீபத்துக்குமேல் ஒரு தீபம் ஏற்றினால் சகிக்காமல் அப்படி வீண்செலவு செய்யும் காசுக்கு அமுதுவாங்கி கஞ்சிகாய்ச்சி ஏழைகளுக்கு வார்த்தாலும் பெரும் பயனைத் தரும் என்று சொன்ன வள்ளலார் வாக்கியத்தில் கவனத்தை வைத்து சுத்த சன்மார்க்கத்திற்குரிய சாதனங்கள் இன்னது என்று அறிந்து அந்தச் சற்குரு வாக்கியத்திற்கு மாறுபாடில்லாமல் நாம் நடப்போமேயாகில் வள்ளலார் சொன்னபடி எல்லாம் வல்ல சித்தன் திருக்கோலத்துடன் வெளிப்படும்போது நாம் பெரும்பயனை அடைவது சத்தியம். நாம் அந்தத் திருவருள் வாக்கியத்திற்கு விரோதமாக நடப்போமேயாகில் நாம் செய்யுங் காரியங்க ளெல்லாம் ஆற்றில் கரைத்த புளிபோலாகும்.

நேயர்களே! நமது ஆன்மநேய சகோதரர்களில் இந்தக் குருக்களும் ஒருவர்தான். ஆனால் நமது சற்குருவின் கொள்கைக்கு மாறுபட்டதினால் அவரை எதிரியாக வைத்துப் பேச நேரிட்டது. இதுவரையில் அவர் சம்பாரித்துக்கொண்ட பொருள்போதும், இனியாவது வள்ளலார் சொன்ன மரபுக்கு விரோதமான காரியங்கள் அந்தவிடத்தில் செய்யாமல் செத்த நாய்களைப் போலிருங்க ளென்று வள்ளலார் சொன்ன வாக்கியத்தைக் கவனித்து நடக்கும்படி இதைப் பார்த்த ஒவ்வொருவரும் அவருக்கு அறிவை வுறுத்துங்கள். கேளாமல் வள்ளலார் வாக்கில் அவலமேயென்று சொல்வாரே யானால் ஜமீன்தார் விஷயமாக வள்ளலார் இவருக்குச் சொன்னபடி இவருடைய இருப்பிடத்திற்குப்போய் விடுவதே நலம். இல்லாவிட்டால் வள்ளலார் கொள்கைக்கு விரோதமான காரியங்கள் செய்யும்போது அவமதிக்கப்படுவார். நாம் என்ன செய்யலாம்? விதியின்படி வந்ததை அனுபவிக்க வேண்டியதுதான்.

வள்ளலார் விவகார காலத்திலிருந்த சில அபிமானிகளும் இப்போது லட்சியம் வைத்துச் சேரும் சில அபிமானிகளும் இவர் ஜாலவலையில் அகப்பட்டு மயங்குகிறபடியால் அம் மயக்கங்களை நீக்கும் பொருட்டே இவர் விஜய ௵ ஆனி ௴ 22 தேதி எழுதி வெளிப்படுத்திய விளம்பரத்திற்கு இந்த மறுப்பு எழுதலானோம். இப்போது இவருடைய திவ்விய சரித்திரங்களை இவ்வளவில் விட்டு இனி வெளிப்படப்போகிற வடலுார் சரித்திரத்தில் இன்னம் விரிவைப் பார்க்கலாம்.

ஜென்மங்கள் அளவில்லை. அந்தந்த ஜென்மங்களிலும் அடைந்த மரணம் பிணி மூப்பு அளவில்லை. இப்போது பெறுதற்குரிய உயர் பிறப்பாகிய மனித தேகத்தைப் பெற்றோம். இந்த ஜென்மத்திலாவது இந்த மூன்று அவஸ்தையும் ஒழித்து எக்காலத்தும் அழிவில்லாத பேரின்ப லாபத்தைப் பெற்று வாழலாம். இப்படிப்பட்ட பேரின்ப லாபத்திற்காகவே பெரியோர் களெல்லாம் அழுதார்கள். அனேகர்கள் உணவில்லாமல் உறக்கத்தை விட்டு ஐம்பொறிகளை யடக்கி ஊனில் புற்றெழுந்து பூமிகளிலும் மலைகளிலும் குகைகளிலும் அனேக காலங்களாகத் தவஞ்செய்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு ஒரு தவமுமில்லாமல் இப்படிப்பட்ட லாபம் வந்துவாய்ப்பது நாம் முன் செய்த தவப்பயந்தான்.

வள்ளலாரால் எழுதி வெளியிட்ட பத்திரிகை ஒன்றை இதனடியிற் காண்க.

சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும். இதற்கு எவ்விதப்பட்ட தடைகளுமில்லை. தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந் தொட்டு அளவிறந்த நெடுங்காலம் வரையில் வழங்கும். அதன் மேன்மேலும் வழங்கும். பலவகைப்பட்ட சமய பேதங்களும் சாத்திர பேதங்களும் ஜாதி பேதங்களும் ஆசார பேதங்களும் போய் சுத்த சன்மார்க்கப் பெருநெறி யொழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம். இது (29) வருஷத்திற்குமேல் இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட ஏற்பாட்டு கர்த்தர்கள் மூர்த்திகள் கடவுள் தேவர் அடியார் யோகி ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல. இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும் எல்லாத் தேவர்களும் எல்லாக் கடவுளரும் எல்லாத் தலைவர்களும் எல்லா யோகிகளும் எல்லா ஞானிகளும் தங்கள்தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி இது உண்மை ஆயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன் பெறுகின்றேன் பெற்றேன். என்னை அடுத்தவர்களும் பெறுதற்கு யாதொரு தடையுமில்லை பெறுவீர்கள் தடையுமில்லை பெறுகின்றீர்கள் பெற்றீர்கள் அஞ்சவேண்டாம்.

பிரஜோத்பத்தி ௵
சித்திரை ௴ 1 உ
சித்திவளாகம்
திருவருட்பிரகாச வள்ளலார் கையெழுத்து

இதன்றி இந்தக் கலியுகம் 5000க்கு மேல் சுத்த சன்மார்க்கம் விளங்கு மென்றார்கள். நம்முடைய புராணங்களிலும் கலவோ பஞ்ச சாஹஸ்திராணி ஜாயந்திரி வர்ண சங்கரஹா 5000க்கு மேல் கலியுகம் சங்கரமென்று சொல்லப்பட்டிருக்கின்றது. மற்ற மதஸ்த்தர்களும் இந்த உலகம் சீக்கிரம் அழிவுபடுமென்று அவர்களுடைய ஆப்தவாக்கியங்களில் சொல்லப்பட்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள். கலி 432000 வருஷமென்று சொல்லியிருக்க 5000த்தில் எப்படி முடிவுபெறும் என்றால் கலியுக வருஷத்தைப் பற்றிச் சுவாமிகளின் திருவாக்கிலிருந்து வெளிப்பட்ட விவகாரத்தை இதனடியிற் காண்க.

முதல் யுகத்திற்கு நாள் 8, இரண்டாவது யுகத்திற்கு நாள் 6, மூன்றாவது யுகத்திற்கு நாள் 4, நான்காவது யுகத்திற்கு நாள் 2. நாளொன்றுக்கு நாழிகை 60. நாழிகை ஒன்றுக்கு வினாடி 60. வினாடி ஒன்றுக்கு நொடி 60. இந்த மூன்றையும் பெருக்கினால் நாளொன்றுக்கு 216000 நொடி. இரண்டு நாளைக்கு 432000 நொடி. இந்த நொடிகளை வருஷமென்று கலியுகத்தில் வழங்குகிறார்கள். இது சித்தர்களுடைய பரிபாஷை. கலியுகத்திற்கு வருஷம் 5000 தான். கலியுகத்துக்குக் குறித்த நாள் 2ல் அதாவது 432000 நொடியில் கல்பஞ்செய்து தேகசித்தியைப் பெற்றுக்கொண்டு நம்முடைய கண்ணுக்குத் தோற்றாமல் வேறு வடிவத்தோ டிருக்கிறவன் கலியுக புருஷன். அவனுக்கு வயது 5000தான். அவனுடைய சங்கற்ப விகற்பங்களால் இந்த உலகம் அசைவுபெற்று ஆடுகின்றது. இப்படியே அந்தந்த யுகதர்மத்திற்கு தக்கபடியே ஒவ்வொரு வல்லப சித்தனும் ஆண்டவருடைய நியதியின்படி அந்தந்த யுகதர்மத்திற் குறித்த நாள்களில் திருவருளால் தேகசித்தியைப் பெற்றுக்கொண்டு யுகதர்மங்களே நடத்தவேண்டும். இந்தக் கலியுகத்தை நடத்துகிறவன் கர்மசித்தன். இந்த 5000க்குமேல் வெளிப்படப் போகிறவன் ஞானசித்தன். இந்த சுத்த சன்மார்க்கம் அனேக கல்பங்களுக்கு ஒருதரம் வருகிறது. இந்தச் சுத்த சன்மார்க்க காலத்தில் சர்வ ஆன்மாக்களும் அநுகிரகம் பெறுவார்கள் என்றார்கள்.

நேயர்களே! ஒவ்வொரு யுகதர்மங்களே நடத்த திருவருள் வலத்தால் வெளிப்படும் வல்லப சித்தர்கள் அதற்குமுன் நடந்தேறிவரும் யுகதர்மங்களை மாற்றவேண்டுமானால் தெய்வ வல்லபம் வெளிப்பட்டாலல்லது நடந்தேறிவரும் யுகதர்மங்கள் மாறாது. பெரியோர்களுடைய வாக்கியங்களும் அப்படியே சொல்லப்பட்டிருக்கின்றது.

"தோல்வியும் வெற்றியும் சொன்மதங்கட் கெல்லாம் காலபேதத்தினா லுண்ந்தீபற - கருத்தன்செயல் தென்றுந்தீபற" என்று சொன்னபடி காலபேதமும் கருத்தன் செயலுங் கூடினாலல்லது இப்போதிருக்கும் சமயங்களும் மதங்களும் மாறாது. ஆதலால் கலியுக தர்மம் மாறி சமரச சுத்த சன்மார்க்கம் வெளிப்படும் போது இறந்தோர் முதலானவர்களே தெய்வ வல்லபத்தால் எழுப்பிக் காட்டினா லல்லது கலியுக தர்மம் மாறாது. ஆதலால் 5000 க்குமேல் சமரச சுத்த சன்மார்க்கத்தை விளக்கஞ்செய்ய திருவருள் வலத்தால் வெளிப்படும் ஞானசித்தன் இறந்தோர் முதலானவர்களை எழுப்புவது உண்மை.

வள்ளலாரால் வெளிப்பட்டிருக்கும் பத்திரிகையையும் பாசுரங்களையும் இதனடியிற் காண்க.

அன்புள்ள நீங்கள் சமரச வேத சன்மார்க்க சங்கத் தருமச்சாலைக்கு மிகவு முரிமையுடை யீர்களாயில் உங்களுக்கு உண்மையுடன் அறிவிப்பது. நீங்களும் உங்களை யடுத்தவர்களும் சிற்றம்பலத் தந்தையார் திருவருளால் சுகமாக வாழ்வீர்களாக.

கர்மகால முதலிய பேதங்களால் யார்க்காயினும் தேக ஆனி நேரிட்டால் தகனஞ் செய்யாமல் சமாதியில் வைக்கவேண்டும். இறந்தவர்கள் திரும்ப எழுந்து நம்முடன் இருக்கப் பார்ப்போமென்கிற முழு நம்பிக்கையைக் கொண்டு எவ்வளவுந் துயரப்படாமலும் அழுகுரல் செய்யாமலும் சிற்றம்பலக் கடவுள் சிந்தையுடனிருக்க வேண்டும். புருடனிறந்தால் மனைவி தாலிவாங்குதல் வேண்டாம். மனைவியிறந்தால் புருடன் வேறு கல்லியாணப் பிரயத்தினம் செய்யவேண்டாம். பிள்ளைகளிறந்தால் சஞ்சலிக்க வேண்டாம். கர்மகாரியங்கள் ஒன்றுஞ் செய்யவேண்டாம். தெரிவிக்கத் தக்கவர்களுக்குத் தெரிவித்து ஒரு தினத்தில் நேரிட்டவர்களுக்கு நேரிட்டமட்டில் அன்னவிரயஞ் செய்யவேண்டும். இவ்வாறு உண்மையாக நம்பிச் செய்யுங்கள். செய்திருந்தால் சமரச வேத சன்மார்க்க சங்கமும் மேற்படி தருமச்சாலையும் நிலைபெற விளக்கஞ் செய்யும் பொருட்டாகவும் கருணைகூர்ந்து எனது தந்தையாராகிய எல்லாம் வல்ல திருச்சிற்றம்பலக் கடவுள் பார்வதிபுர சமரச வேத சன்மார்க்க சங்கத் தருமசாலைக்கு எழுந்தருளி காட்சி கொடுக்குந் தருணம் மிகவும் அடுத்த சமீபமாக விருக்கின்றது. அந்தத் தருணத்தில் சாலைக்கி உரியவர்களாயிருந்து இறந்தவர்களை யெல்லாம் எழுப்பிக் கொடுத்தருளுவார். இது சத்தியம் சத்தியம். இந்தக் கடிதம் வெளிப்பட்டறிந்துக் கொள்ளாமுன் இறந்து தகனமானவர்களையும் எழுப்பியருளுவார். இது வெளிப்பட் டறிந்தபின் தகனஞ்செய்தல் கூடாது. அது சன்மார்க்க சங்கத்திற்குத் தக்கதல்ல. ஆதலில் மேற்கண்டபடி உண்மையான நம்பிக்கையுடன் வாழ்வீர்களாக. எனக்கு உலகு அறிவுதெரிந்துதொட்டு எனது தந்தையார் திருவருளை நான் அடையும் வரையில் என்னுடன் பழகியும் என்னை நம்பியடுத்தும் என்னைக் கேழ்வியால் விரும்பியும் எனக்குரிமைப்பட்டும் இருந்து இறந்தவர்களை யெல்லாம் எழுப்பிக்கொடுத்து சமரச சன்மார்க்க சங்கத்தை விர்த்தி செய்விக்கத் திருவுளத்துக் கருதிய பெருங்கருணை வள்ளல் சாலைக்குரியவர்களாகி யிருந்தும் அவநம்பிக்கையுட னிருக்கின்றவர்கள் விஷயத்திலும் இந்த உபகாரஞ் செய்தருளுவார். ஆனால் அவர்கள் சன்மார்க்க சங்கத்திற்கு மாத்திரம் அருகராகார்கள்.

ஆகலில் நம்பிக்கையுடனிருங்கள். பெரிய களிப்பை யடைவீர்கள் இது சத்தியம்.

பிரமோதூத ௵
சித்திரை ௴ 1 உ
திருவருட்பிரகாச வள்ளலார் கையெழுத்து

ஆறாம் திருமுறை : இறைவரவு இயம்பல் - வள்ளலார்

அப்பன்வரு தருணம்இதே ஐயம்இலை கண்டாய்

அஞ்சாதே அஞ்சாதே அகிலமிசை உள்ளார்க்

கெய்ப்பறவே சத்தியம்என் றுரைத்திடுநின் உரைக்கோர்

எள்ளளவும் பழுதுவரா தென்னிறைவன் ஆணை

இப்புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும்

எவ்வுயிரும் எவ்வௌரும் ஏத்திமகிழ்ந் திடவே

செப்பம்உறு திருவருட்பே ரொளிவடிவாய்க் களித்தே

செத்தாரை எழுப்புதல்நாம் திண்ணம்உணர் மனனே.


ஆறாம் திருமுறை : ஞானசரியை - வள்ளலார்

முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்

முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே

இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்

எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்

துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்

தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்

பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்

படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.


ஆறாம் திருமுறை : சற்குருமணி மாலை - வள்ளலார்

அஞ்சலை நீஒரு சிறிதும்என் மகனே

அருட்பெருஞ் சோதியை அளித்தனம் உனக்கே

துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே

சூழ்ந்தசன் மார்க்கத்தில் செலுத்துக சுகமே

விஞ்சுற மெய்ப்பொருள் மேனிலை தனிலே

விஞ்சைகள் பலவுள விளக்குக என்றாய்

தஞ்சம்என் றவர்க்கருள் சத்திய முதலே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.


ஆறாம் திருமுறை : நடராஜபதி மாலை - வள்ளலார்

பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம் பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல பேதமுற் றங்கும்இங்கும்

போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண் போகாத படிவிரைந்தே

புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப் பொருளினை உணர்த்திஎல்லாம்

ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ என்பிள்ளை ஆதலாலே

இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே றெண்ணற்க என்றகுருவே

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்திருள் அகற்றும்ஒளியே

நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு நீதிநட ராஜபதியே.


ஆறாம் திருமுறை : நடராஜபதி மாலை - வள்ளலார்

நீடுலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின்வார்த்தை யாவும்நமது

நீள்வார்த்தை யாகும்இது உண்மைமக னேசற்றும் நெஞ்சம்அஞ் சேல் உனக்கே

ஆடுறும் அருட்பெருஞ் சோதிஈந் தனம்என்றும் அழியாத நிலையின்நின்றே

அன்பினால் எங்கெங்கும் எண்ணிய படிக்குநீ ஆடிவாழ் கென்றகுருவே

நாடுநடு நாட்டத்தில் உற்றஅனு பவஞானம் நான்இளங் காலைஅடைய

நல்கிய பெருங்கருணை அப்பனே அம்மையே நண்பனே துணைவனேஎன்

ஊடுபிரி யாதுற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனேஉள்

ஊறும்அமு தாகிஓர் ஆறின்முடி மீதிலே ஓங்குநட ராஜபதியே.


ஆறாம் திருமுறை : தலைவி கூறல் - வள்ளலார்

உள்ளுண்ட உண்மைஎலாம் நான்அறிவேன் என்னை

உடையபெருந் தகைஅறிவார் உலகிடத்தே மாயைக்

கள்ளுண்ட சிற்றினத்தார் யாதறிவார் எனது

கணவர்திரு வரவிந்தக் காலையிலாம் கண்டாய்

நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப

நன்குபுனைந் தலங்கரிப்பாய் நான்மொழிந்த மொழியைத்

தள்ளுண்டிங் கையமுறேல் நடத்திறைவர் ஆணை

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.


ஆறாம் திருமுறை : சுத்த சிவநிலை - வள்ளலார்

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்சொல் வார்த்தைஅன்றி

நான்உரைக்கும் வார்த்தைஅன்று நாட்டீர்நான் - ஏன்உரைப்பேன்

நான்ஆர் எனக்கெனஓர் ஞானஉணர் வேதுசிவம் ஊன்நாடி நில்லா உழி.


ஆறாம் திருமுறை : சுத்த சிவநிலை - வள்ளலார்

போற்றி உரைக்கின்றேன் பொய்என் றிகழாதீர்

நாற்றிசைக்கண் வாழும் நமரங்காள் - ஆற்றலருள்

அப்பன்வரு கின்றான் அருள்விளையாட் டாடுதற்கென்

றிப்புவியில் இத்தருணம் இங்கு.


ஆறாம் திருமுறை : ஞானசரியை - வள்ளலார்

குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்

வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது

மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்

பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்

புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்

செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்

சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.


ஆறாம் திருமுறை : ஞானசரியை - வள்ளலார்

நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ

நெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல் வேனோ

சார்புறவே அருளமுதம் தந்தெனையேமேல் ஏற்றித்

தனித்தபெரும் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான்

சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச்

சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த

ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின்

உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே.


ஆறாம் திருமுறை : சத்திய அறிவிப்பு - வள்ளலார்

சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்

இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்

சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்

தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்

செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்

திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.


ஆறாம் திருமுறை : பேறடைவு - வள்ளலார்

களிப்பொடு மகனே அருள்ஒளித் திருவைக்

கடிகைஓர் இரண்டரை அதனில்

ஒளிப்பிலா துலகம் முழுவதும் அறிய

உனக்குநன் மணம்புரி விப்பாம்

அளிப்புறு மகிழ்வால் மங்கலக் கோலம்

அணிபெறப் புனைகநீ விரைந்தே

வெளிப்பட உரைத்தாம் என்றனர் மன்றில்

விளங்குமெய்ப் பொருள்இறை யவரே


ஆறாம் திருமுறை : சத்திய அறிவிப்பு - வள்ளலார்

என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்

இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்

பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது

பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்

தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்

சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே

மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே

வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே.


இப்படிப்பட்ட பாசுரங்கள் இன்னம் அனேகம் வள்ளலார் திருவாக்கிலிருந்து வழிந்திருப்பதை ஆறாவது திருமுறையில் பார்க்கலாம்.

மேற்சொன்ன பாசுரங்களில் 2½ கடிகையென்பது 25 வருஷம். இந்த 25 வருஷம் வள்ளலார் திருக்காப்பிட்டுக்கொண்ட ஸ்ரீமுக வருஷ முதல் இன்று வந்து நானிருக்கு மிடத்தி லமர்கின்றார் என்றது ஸ்ரீமுக வருஷம் தைமாதம் 19ம் தேதி சுக்கிர வாரம் திருக்காப்பிட்டுக் கொண்டதினம். பின்சாரு மிரண்டரை நாழிகைக்குள்ளே யெனது பேருடம்பிற் கலந்துளத்தே பிரியாமலிருப்பார் என்றது, இப்போதிருக்கும் மங்கலக்கோலந்தான். மின்சாரு மிடைமடவா யென் மொழி நின்றனக்கே வெளியாகு மிரண்டரை நாழிகை கடந்தபோதே என்றது ஸ்ரீமுக வருஷமுதல் 25க்குமேல். இப்போது வள்ளலார் திருக்காப்பிட்டுக்கொண்டு 22 வருஷமாகின்றது. இன்னம் அந்தத் திருவருள் சித்தத் திருக்கோலத்துடன் வெளிப்பட 3 வருஷமிருக்கின்றது. கலியுகமும் 4997 ஆய்விட்டது. 5,000க்கு இன்னம் 3 வருஷமிருக்கின்றது. ஆதலால் நேயர்களே ஈரேழு பதினான்கு உலகங்களிலுள்ள யாவரும் அதிசயிக்கும்படி எல்லாம்வல்ல சித்தன் திருக்கோலங்கொண்டு அருளர சாட்சி செய்யு நிமித்தம் வெளிப்பட எழுந்தருளுந் தருணம் சமீபித்திருக்கின்றது. ஒளியினால் இருள் நீங்குவதுபோல் புண்ணியதேகம் வெளிப்படும்போது பாவதேகங்கள் நசித்துப்போகும். அப்படிப்பட்ட உற்பாத மரணங்களுக்கு நாம் ஆளாகாமல் பாவத்திற்கு முதன்மையாக இருக்கும் கொலை புலையாதிகளை பற்றற விட்டு சைவம் வைணவம் சமணம் பவுத்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த வேதங்கள் ஆகமங்கள் சாஸ்திரங்கள் புராணங்கள் முதலிய கலைகளெல்லாம் தத்துவ சித்தி கற்பனைக் கலைகளென்றும் வேதாந்த சித்தாந்த முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்காநுபவ லேசசித்தி பேதங்களென்றும் வள்ளலாரால் விவகரித்திருக்கிறபடி அதுகளையும் பற்றறவிட்டு அந்தத் திருவருள் வாக்கில் உண்மை நம்பிக்கையை வைத்து எல்லாச் சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொதுநெறியாகி விளங்கும் சமரச சுத்த சன்மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சமரச சுத்த சன்மார்க்கத்தைப் பிடித்து இயற்கையிற்றானே விளங்கு கின்றவராய் உள்ளவரென்றும் இயற்கையிற்றானே உள்ளவராய் விளங்குகின்றவ ரென்றும் இரண்டுபடாத பூரண இன்பமானவரென்றும் எல்லா அண்டங்களையும் எல்லா உலகங்களையும் எல்லாப் பதங்களையும் எல்லாச் சத்திகளையும் எல்லாச் சத்தர்களையும் எல்லாத் தத்துவங்களையும் எல்லாத் தத்துவிகளையும் எல்லா வுயிர்களையும் எல்லாச் செயல்களையும் எல்லா இச்சைகளையும் எல்லா ஞானங்களையும் எல்லாப் பயன்களையும் எல்லா வனுபவங்களையும் மற்ற எல்லாவற்றையும் தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல் வாழ்வித்தல் குற்றம் நீக்குவித்தல் பக்குவம் வருவித்தல் விளக்கஞ் செய்வித்தல் என்னும் ஐந்தொழில்களாதியாய் பெருங்கருணைத் தொழில்களை இயற்றுவிக்கின்றவ ரென்றும் எல்லாமானவ ரென்றும் ஒன்றுமல்லாதவ ரென்றும் சர்வகாருண்ய ரென்றும் சர்வவல்லவ ரென்றும் எல்லாம் உடையராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்புயர் வில்லாத் தனிப்பெருந் தலைமை அருட்பெருஞ்சோதிய ரென்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவென்னும் பூரணப் பொது வெளியில், அறிவாரறியும் வண்ணங்க ளெல்லாமாகி விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை நாம் சிந்தித்து பொதுப்பட நல்லறிவு உயிரிரக்கம் பொது நோக்கம் திரிகரண அடக்க முதலிய நற்குணவொழுக்கங்களில் ஒழுகப்பெற்று இறந்தவர்களை சமாதிசெய்து,

ஆறாம் திருமுறை : சமாதி வற்புறுத்தல் - வள்ளலார்

பரன்அளிக்கும் தேகம்இது சுடுவதப

ராதம்எனப் பகர்கின் றேன்நீர்

சிரம்நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள்

பற்பலரும் சித்த சாமி

உரனளிக்க எழுகின்ற திருநாள்வந்

தடுத்தனஈ துணர்ந்து நல்லோர்

வரனளிக்கப் புதைத்தநிலை கா­ரோ

கண்கெட்ட மாட்டி னீரே.


எல்லாம் வல்ல சித்தன் வெளிப்படும் மங்கல திருக்கோலத்தைக் கண்காட்சி யாக உடல் குழைய உள்ளங் குளிர ஆனந்தக் கண்ணீர்கொண்டு பரவசத்துடன் தரிசிக்கப்பெறும் பெரும் புண்ணிய முடையவர்களா யெதிர்பட வாய்க்கபெறவும் தின்றோமேயானால் நாம் எல்லவரும் சுத்த சன்மார்க்கத்திற்கு உரிமை யுடையவர்களாகி இறந்தவர் உயிர்பெற்றெழுதல் மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு களிப்படைவதோடு அறிந்தறியாத அற்புத அறிவுகளையும் செய்தறியாத அற்புதச் செயல்களையும் அனுபவித்தறியாத அற்புத அநுபவங்களையும் வெளிப்பட தரிசிக்கும் அதே கணத்தினுள்ளே பெற்றுப் பெருங்களிப்புடன் எக்காலத்தும் எவ்விதத்தும் தடைபடாத சத்திய சுக பூரண பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழப்பெறுவோம். இதுசத்தியம்- இதுசத்தியம்-இதுசத்தியம்.

இங்ஙனம்,
நமது திருவருட்பிரகாச வள்ளலாரால் விரித்து விவகரிக்கப்பட்ட மலையிலக்கான பொய்யாப் பெருமொழிகளின் கருணாரசத்தின் வெள்ளப் பெருக்கத்தில் ததும்பி வழிந்த மந்திரத் திருவருண் மெய்ம் மொழிகளின் சுருக்கம்.

வடலூர் டிரஸ்டிகள் மறுப்பு முற்றிற்று !