Title

🪔 அருட்பெருஞ்ஜோதி 🪔 அருட்பெருஞ்ஜோதி 🪔

🪔 தனிப்பெரும்கருணை 🪔 அருட்பெருஞ்ஜோதி 🪔


வள்ளலார் கூறும் அந்த இரண்டரை கடிகைநேரம் என்பது எவ்வளவு நேரமாக இருக்கும்? காலத்தை கணக்கிட கடிக எந்திரம் எனப்படும் நேரக் கணக்கிடும் கருவியை அக்காலத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர். கடிகை+ஆரம் என்ற இருபதங்களும் சேர்ந்துதான் கடிகாரம் என்று மருவியுள்ளது. இந்தக் காலம் அறியும் கருவியை மாலை போல கழுத்தில் சூடிக்கொண்டிருப்பர். இதனால்தான் இதற்கு கடிகை, ஆரம் எனப் பெயர் வந்தது. சூரியனின் போக்கைவைத்து நேரம் அறிய இந்தக் கருவி உதவியது. சரி, கடிகை என்பது இன்றுள்ள நேரப்படி எவ்வளவு நேரமாக இருக்கும் என்றால், ஒருகடிகை (ஒருநாழிகை) என்பது 24 நிமிடங்கள் ஆகும். அப்படிப்பார்க்கையில் இரண்டரை கடிகை என்பது 60 நிமிடங்கள் ஆகும். அதாவது ஒருமணிநேரத்தைக் குறிக்கிறது. இங்கு நாழிகை கணக்கையே கடிகைக்கும் கூறுவது பொருந்தாது. நாழிகை வேறு, கடிகை வேறாக இருக்க வேண்டும். இதேபோன்று வள்ளலார் 'இரண்டரை நாழிகை' என்ற நேரத்தை தமது திருவருட்பா பாடலில் (5818) பயன்படுத்தியுள்ளார்கள். அந்த இரண்டரை நாழிகை என்பதுதான் ஒருமணிநேரம் என்பது.

வள்ளலார் தாம்கூறியவாறு திருவறைக்குச்சென்று ஒருமணிநேரத்தில் வெளியில் வந்துவிட்டாரா? என்றால் இல்லை. அப்படியெனில் அவர் கூறிய கடிகை என்பதற்கு வேறு ஏதேனும் பொருள் உண்டா? ஒருகடிகை என்பது 60 வருடங்கள் கொண்ட நமது தமிழ் வருடவட்டத்தைக் குறிப்பதாக ஒருசிலர் கூறுகின்றனர். அப்படிப் பார்க்கையில் இரண்டரைக்கடிகை என்பது 150 வருடங்களைக் குறித்து நிற்கிறது. வள்ளற்பெருமான் மறைந்த 1874ஆம் ஆண்டிலிருந்து 150 வருடங்களைக் கூட்டினால் 2024ஆம் ஆண்டு உதயமாகிறது. ஆக, தமிழ்வருடவட்டத்தின்படி கணக்கெடுக்கையில், வள்ளலார் 2023ஆம் ஆண்டுவரைதான் நம்முன் தோன்றாமல் இருப்பார.்

அடுத்ததாக, "பின்னர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் வருவர். அப்போது இவ்வுருவுடன் சித்திகள் பலநிகழ்த்துவோம்." என்று கூறியிருக்கின்றார். நாம் தற்போதைக்கு நம்மால் கணக்கிடப்பட்ட 2023 ஆண்டுக்கு பின்னர் அதாவது 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதியோ அல்லது அதற்கு பின்னரோ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருவார் எனக்கொள்ளலாம். சரி, தற்போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இங்கில்லையா? என்ற கேள்வி எழுகிறது. அவர் எங்கிருந்து வருவார்? என்ற கேள்வியும் எழுகிறது. பக்குவமில்லாமல் நாம் இருப்பதால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம்முள் இருப்பதை நாமும் அறியமுடியவில்லை, அவரும் வெளிப்படுத்திக்கொள்ளவில்லை அவ்வளவே. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பக்குமுள்ளோரிடத்தில் அவர்களது அனுபவத்தின்கண் வெளிப்படையாக எழுந்தருள்வார், எங்கும் வெளியிலிருந்து வருபவர் அல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், எனவே பக்குமுள்ளோர்களிடத்து உள்ளிலிருந்துதான் வருவார்.

அவ்வாறு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நமது உள்ளங்களிலெல்லாம் வந்தவுடன் வள்ளற்பெருமானும் தாம் 1874ஆம் ஆண்டு மறைந்தபோது எவ்வாறு இருந்தாரோ அதே தேகத்துடன் உருவுடன் வயதுடன் 2023ஆம் ஆண்டிற்குப்பிறகு நமது கண்களுக்கு வெளிப்படையாகத் தோன்றி சித்துகள் பல நிகழ்த்துவார். கடிகை என்பதற்கு நாம் கணக்கெடுத்தது சரி என்றால், அதற்கு இன்னும் 3 வருடங்கள்தான் நாம் காத்திருக்கவேண்டும். அதற்குள் நாம் நம்மை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். வள்ளற்பெருமானை நேரில் பார்க்கும் பாக்கியம், இதனைபடிக்கும் பலருக்கு கிடைக்கப்போகிறது


Contact: vallalardreams@gmail.com